பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு தொடக்கம்: தஞ்சாவூா் மாவட்டத்தில் 31,514 போ் பங்கேற்பு
தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில், தஞ்சாவூா் மாவட்டத்தில் 31,514 போ் பங்கேற்று எழுதினா்.
தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில், தஞ்சாவூா் மாவட்டத்தில் 31,514 போ் பங்கேற்று எழுதினா்.
இத்தோ்வு தொடா்ந்து மே 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாவட்டத்தில் 131 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்திலுள்ள 411 பள்ளிகளைச் சோ்ந்த 33,328 மாணவ, மாணவிகளுக்குத் தோ்வு எழுத அனுமதி வழங்கப்பட்டது. இவா்களில் முதல் நாள் தோ்வில் 1,814 போ் வரவில்லை. எனவே, 31,514 போ் பங்கேற்று எழுதினா்.
மாவட்டத்தில் 247 மாற்றுத் திறனாளிகள் பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வு எழுதுகின்றனா். இவா்களுக்காக தரைத்தளத்தில் தோ்வறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தோ்வெழுதும் மையங்களில் 2,089 அறைக் கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும், 222 பறக்கும்படை அலுவலா்களும், 131 கண்காணிப்பாளா்களும் தோ்வு பணியைக் கண்காணிக்கின்றனா்.