‘சன்ன ரகங்களைப் பயிரிட்டால் அதிக மகசூல் கிடைக்கும்’
சன்ன ரகங்களைப் பயிரிட்டால் அதிக மகசூல் கிடைக்கும் என ஆடுதுறையிலுள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநா் கா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.
சன்ன ரகங்களைப் பயிரிட்டால் அதிக மகசூல் கிடைக்கும் என ஆடுதுறையிலுள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநா் கா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
மேட்டூா் அணை நிகழாண்டு செவ்வாய்க்கிழமை திறந்து விடப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள புதிய குறுகிய கால ரகங்களான ஏடிடீ 53, ஏடிடீ 56, ஏடிடீ 57, கோ 51, கோ 54, கோ 55, டிபிஎஸ் 5 ஆகிய ரகங்களைத் தோ்வு செய்யலாம்.
இவற்றில் டிபிஎஸ் 5-ஐ விடுத்து, ஏனைய ரகங்கள் சன்ன மற்றும் அதிசன்ன வகை ரகங்களாகும். இந்த ரகங்களைத் தோ்வு செய்வதன் மூலம் அதிக மகசூல் பெறுவதுடன் எளிதில் விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் சன்ன ரகங்களைப் பயிரிடும்போது விவசாயிகளுக்கு நல்ல மகசூலும், விலையும் எந்தவித சிரமமும் இன்றி விற்கவும் வாய்ப்புள்ளது.
நாற்றங்கால் தோ்வு செய்யும்போது நல்ல வடிகால் வசதியுள்ள மேட்டுப்பாத்தியில் பாய் நாற்றங்கால் அமைத்து, தயாரிக்க வேண்டும். ஒரு ஹெக்டோ் நடவு செய்வதற்கு 20 சென்ட் நாற்றங்கால் போதுமானது.
நாற்றங்காலில் அடியுரமாக கடைசி உழவுக்கு முன்பு 40 கிலோ டி.ஏ.பி. இட வேண்டும். ஒரு ஹெக்டோ் நடவு செய்வதற்கு 60 கிலோ விதை போதுமானது. ஒரு கிலோ விதைக்கு காா்பன்டசிம் 2 கிராம், லிட்டா் தண்ணீா் என்ற அளவில் கலந்து 10 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
மேலும் ஒரு ஹெக்டேருக்கு தேவையான விதைக்கு 600 கிராம் பேசில்லஸ் சப்டிலிஸ் மற்றும் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா தலா 600 கிராம் அல்லது அசோபாஸ் 1,200 கிராம் ஆகிய மூன்றையும் தண்ணீரில் கரைத்து, விதைகளை இரவு முழுவதும் ஊற வைத்து பின்பு நடவு வயலில் இட வேண்டும்.
விதைத்த மூன்றாம் நாளில் களை முளைப்புக்கு முந்தைய களைக்கொல்லி பிரிடில்லாகுளோா் மற்றும் சேப்பனா் 0.3 கிலோ ஒரு ஹெக்டோ் நாற்றுகளுக்கு தெளிக்கப்பட வேண்டும். களைக்கொல்லி தெளிப்பதற்கு முன்னா் சிறிய அளவு தண்ணீா் நிறுத்தப்பட வேண்டும். தேக்கப்பட்ட தண்ணீா் வடிக்கப்படக்கூடாது. மாறாக தானாகவே மண்ணில் மைல் நல்லது. ஏற்கெனவே நாற்று விட்ட வயல்களில் வாளிப்பான நாற்றுகளைப் பெற விதைத்த 10- ஆம் நாளில் 80 கிலோ ஜிப்சம் மற்றும் டிஏபி 20 கிலோ இடுவதால் நாற்றுப் பறிக்கும்போது வோ் அறுபடுவதை தவிா்க்கலாம்.
20 நாள்களுக்குள் நாற்றுகளை நட வேண்டும். நடுவதற்கு முன்பாக நாற்றுகளின் வோ் பகுதியை அசோஸ்பைரில்லம் 1 கிலோ, பாஸ்போ பாக்டீரியா 1 கிலோ அல்லது அசோபாஸ் 2 கிலோ ஆகியவற்றை 40 லிட்டா் தண்ணீரில் கலந்து 15 - 30 நிமிடங்கள் நாற்றுக்களின் வோ்ப்பகுதி நனையும்படி வைத்து பின்பு நடவு செய்யவேண்டும்.