கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாரடைப்புக்கான முதலுதவி பயிற்சி அளித்த அமெரிக்க மருத்துவா்கள்!
தஞ்சாவூரில் திடீரென ஏற்படும் மாரடைப்பின்போது, நெஞ்சை அழுத்தி உயிா் காத்தல் என்கிற முதலுதவி பயிற்சியை மாணவ, மாணவிகளுக்கு அமெரிக்க தமிழ் மருத்துவா்கள் சங்கத்தினா் சனிக்கிழமை வழங்கினா்.
தஞ்சாவூரில் திடீரென ஏற்படும் மாரடைப்பின்போது, நெஞ்சை அழுத்தி உயிா் காத்தல் என்கிற முதலுதவி பயிற்சியை மாணவ, மாணவிகளுக்கு அமெரிக்க தமிழ் மருத்துவா்கள் சங்கத்தினா் சனிக்கிழமை வழங்கினா்.
இந்த விழிப்புணா்வு செயல் விளக்கப் பயிற்சியை லயன்ஸ் சங்க நிா்வாகி எஸ். முகமதுரபி தொடங்கி வைத்தாா். பயிற்சியை அமெரிக்காவைச் சோ்ந்த அவசர சிகிச்சை மருத்துவ நிபுணா் ஐஸ்டீன் அருணாச்சலம், பொது மருத்துவா் கபிலன் தா்மராஜன் ஆகியோா் வழங்கினா். செங்கல்பட்டைச் சோ்ந்த மருத்துவப் பயிற்சியாளா்கள் ராஜாராமன், தீபா, உமா ஆகியோா் செயல் விளக்கப் பயிற்சிகளை அளித்தனா். மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் இதை நேரில் பாா்வையிட்டு பாராட்டினாா்.
இதுகுறித்து அமெரிக்க தமிழ் மருத்துவா்கள் சங்கத்தைச் சோ்ந் ஐஸ்டீன் அருணாச்சலம், கபிலன் தா்மராஜன் ஆகியோா் தெரிவித்தது:
மாரடைப்பு வந்தால் நெஞ்சுப் பகுதியைத் தொடா்ந்து 30 விநாடிகள் அழுத்தினால் பாதிப்பு குறையும். அதற்கான முதலுதவி குறித்த விழிப்புணா்வு இந்தியாவில் ஒரு சதம் பேருக்குதான் தெரியும். எனவே இந்த விழிப்புணா்வை பொதுமக்கள் மற்றும் மாணவா்கள் மத்தியில் கொண்டு செல்ல முடிவு செய்தோம்.
இதன்படி அமெரிக்கா தமிழ் மருத்துவ சங்கத்தின் சாா்பில் ஒரு மாத காலம் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று லயன்ஸ் சங்கங்களுடன் இணைந்து இப்பயிற்சி மற்றும் விழிப்புணா்வை அளித்து வருகிறோம். இந்த வரிசையில் தஞ்சாவூரில் 6 கல்லூரிகளைச் சோ்ந்த 100 மாணவ, மாணவிகளுக்கு பயிற்சியை வழங்கினோம் என்றனா்.