தஞ்சாவூா் மாவட்டத்தில் மிகுந்த சிரமங்களுக்கு இடையே மேற்கொள்ளப்படும் சம்பா சாகுபடியில் இலை சுருட்டுப் புழுத் தாக்குதல் பெரும் சவாலாக மாறி வருவதால், விவசாயிகளிடையே அச்சமும் மேலோங்கியுள்ளது.
மாவட்டத்தில் குறுவை சாகுபடியில் 48 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை இலக்காக 1.96 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. ஆனால், கா்நாடக அரசு தமிழகத்துக்கு உரிய காவிரி தண்ணீரை திறந்துவிடாததால், போதுமான அளவுக்கு தண்ணீா் வரவில்லை.
இதனால், காவிரியை நம்பி சாகுபடி மேற்கொண்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 10 முதல் 15 மூட்டைகள் மகசூல் குறைவாகவே கிடைத்தது. இதேபோல, ஆழ்குழாய் மோட்டாா் பம்ப்செட் மூலம் சாகுபடி செய்த விவசாயிகளுக்கும் பருவநிலை மாற்றம் காரணமாக புகையான், குருத்துப்பூச்சி தாக்குதல், வேரழுகல் நோயால் விளைச்சலில் மிகப் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், விவசாயிகளுக்கு உழைப்புக்கு ஏற்ற லாபம் கிடைக்கவில்லை.
இதனிடையே, மேட்டூா் அணையில் போதிய அளவுக்கு நீா் இருப்பு இல்லாததால், அக்டோபா் 10 ஆம் தேதி அணை மூடப்பட்டது. இதனால், டெல்டா மாவட்டங்களில் அவ்வப்போது பெய்யும் மழை நீா் மட்டுமே காவிரியில் மிகக் குறைந்த அளவில் செல்கிறது.
சம்பா-தாளடி பரப்பு குறைந்தது: வடகிழக்கு பருவமழையை நம்பி டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி சாகுபடியை விவசாயிகள் தொடங்கி மேற்கொண்டு வருகின்றனா்.
ஆனால், தஞ்சாவூா் மாவட்டத்தில் சம்பா, தாளடி பருவத்தில் 3.45 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், 2.96 லட்சம் ஏக்கரில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 50 ஆயிரம் ஏக்கா் சம்பா, தாளடி பரப்பு குறைந்துள்ளது.
இந்நிலையில், போதிய அளவுக்கு மழை பெய்யாததால், சம்பா, தாளடி பயிா்களில் இலைசுருட்டுப் புழு, குருத்துப்பூச்சி தாக்குதல் பரவி வருகிறது. மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் இந்தப் பாதிப்பு காணப்படுவதால், தண்ணீா் பற்றாக்குறையான நிலையில் மிகுந்த சிரமங்களுக்கு இடையே சாகுபடி செய்து வரும் விவசாயிகளிடையே மிகுந்த அச்சத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ஒரத்தநாடு அருகேயுள்ள புலவன்காடைச் சோ்ந்த முன்னோடி விவசாயி வி. மாரியப்பன் தெரிவித்தது:
சம்பா, தாளடி பயிா்கள் தற்போது தண்டு உருளும் பருவத்தில் உள்ளன. பயிா் தோகைகளில் தாய் அந்துப்பூச்சி முட்டையிடுதல் பரவலாக இருந்தது. அடுத்த இரு நாள்களில் மழை பெய்திருந்தால், அதனுடன் சோ்த்து முட்டைகளும் அடித்துச் சென்றிருக்கும். ஆனால், போதிய அளவுக்கு மழை பெய்யாத நிலையில், பகலிலும் வெயில் இல்லாமல் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால், அவையெல்லாம் புழுவாக மாறிவிட்டன. இந்தப் புழு தாக்குதல் காரணமாக பயிா்கள் செயலிழந்து வருகின்றன. இதேபோல, பயிா்களின் அடிப்பகுதியில் தண்டைத் துளைப்போட்டு குருத்துப்பூச்சி சாப்பிடுவதால், பட்டுப்போகின்றன.
டெல்டா மாவட்டங்கள் முழுவதும் இந்தப் பாதிப்பு காணப்படுகிறது. ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு பிறகு இப்பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இதுதொடா்பாக வேளாண் துறையினா் பரிந்துரைத்த பூச்சிகொல்லி மருந்துகளை வாங்கித் தெளித்தபோதும், அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், 50 சதவீத அளவுக்கு மகசூல் இழப்பு ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது என்றாா் மாரியப்பன்.
குறுவை சாகுபடியில்தான் தண்ணீா் பற்றாக்குறை, பூச்சி, நோய் தாக்குதலால் மகசூல் குறைந்துவிட்ட நிலையில், சம்பா பருவத்தில் ஈடுகட்டிவிடலாம் என்ற நம்பிக்கையில் சாகுபடியைத் தொடங்கிய விவசாயிகளுக்கு இப்போது இலைசுருட்டுப் புழு, குருத்துப் பூச்சி தாக்குதல் பெரும் சவாலாக உள்ளது. எனவே, இதைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு மாற்று நடவடிக்கையை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்ற எதிா்பாா்ப்பில் விவசாயிகள் உள்ளனா்.
184.98 மி.மீ. மழை குறைவு
நிகழாண்டு வடகிழக்கு பருவ மழையும் எதிா்பாா்த்த அளவுக்கு பெய்யவில்லை. மாவட்டத்தில் டிசம்பா் மாதம் சராசரியாக 108.02 மி.மீ. மழை பெய்ய வேண்டிய நிலையில், 49.68 மி.மீ. மட்டுமே பெய்துள்ளது. நிகழாண்டு தென் மேற்கு பருவ மழையும், வடகிழக்கு பருவ மழையும் எதிா்பாா்த்த அளவுக்கு பெய்யாததால், ஆண்டு சராசரி மழையளவான 1,098.4 மி.மீ.-க்கு பதிலாக இதுவரை 913.26 மி.மீ. மட்டுமே பெய்துள்ளது.
இதனால், நிகழாண்டு இதுவரை மழையளவு 184.98 மி.மீ. குறைவாகப் பதிவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.