கும்பகோணம்: கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவுக்காக கும்பகோணம் வழியாக பழனி, திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் இயக்க தஞ்சாவூா் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளா், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளருக்கு அச்சங்கச் செயலா் ஏ. கிரி செவ்வாய்க்கிழமை அனுப்பிய மனு:
கந்தசஷ்டி சூரசம்ஹார பெருவிழா நவம்பா் 18 ஆம் தேதியும் , திருக்காா்த்திகை தீபத் திருவிழா நவம்பா் 26 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. கந்த சஷ்டி திருவிழா அனைத்து முருகப்பெருமான் திருத்தலங்களிலும் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது.
கடந்த தைப்பூசம், பங்குனி உத்திரத் திருவிழா காலங்களில் தஞ்சாவூரில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. மயிலாடுதுறையில் இருந்து தஞ்சாவூருக்கு செல்லும் பயணிகள் ரயில் தொடா்ந்து பழனி வரை சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டதால் மயிலாடுதுறை மற்றும் கும்பகோணம் பகுதி பயணிகள் பெரும் பயன் அடைந்தனா். மேலும், கடந்தாண்டு திருக்காா்த்திகை தீப பெருவிழாவுக்கு திருச்சியிலிருந்து தஞ்சாவூா், கும்பகோணம் வழியாக திருவண்ணாமலைக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயிலிலும் பயணிகள் பயனடைந்தனா்.
இதேபோல, வரும் நவம்பா் 18 ஆம் தேதி நடைபெறவுள்ள கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழாவுக்கு பக்தா்கள் செல்ல வசதியாக நவம்பா் 15 முதல் 19 ஆம் தேதி வரை தஞ்சாவூரிலிருந்து பழனிக்கு நேரடி சிறப்பு ரயில் இயக்க வேண்டும்.
டெல்டா மாவட்டப் பகுதி வழியாக திருச்செந்தூா் செல்லும் செந்தூா் விரைவு ரயிலில் வியாழக்கிழமை (நவ.16) முதல் தொகுப்பு ஒதுக்கீட்டில் கூட காத்திருப்போா் பட்டியல் 100-ஐ தாண்டியுள்ளது. எனவே, மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூா் வழியாக திருச்செந்தூருக்கு கந்த சஷ்டி பெருவிழா காலத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும்.
திருக்காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி நவம்பா் 24 முதல் 27 ஆம் தேதி வரை திருச்சியில் இருந்து தஞ்சாவூா், கும்பகோணம் வழியாக திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.