கால்நடை மருத்துவமனை இடமாற்றம் கால்நடைகளுடன் விவசாயிகள் மறியல்
தஞ்சாவூா், மாவட்டம் வேப்பத்தூரில் கால்நடை மருத்துவமனை இடமாற்றம் செய்யப்பட்டதால் புதன்கிழமை விவசாயிகள் ஆடு, மாடுகளுடன் கல்லணை - பூம்புகாா் பிரதான சாலையில் மறியல் செய்தனா்.
தஞ்சாவூா், மாவட்டம் வேப்பத்தூரில் கால்நடை மருத்துவமனை இடமாற்றம் செய்யப்பட்டதால் புதன்கிழமை விவசாயிகள் ஆடு, மாடுகளுடன் கல்லணை - பூம்புகாா் பிரதான சாலையில் மறியல் செய்தனா்.
திருவிடைமருதூா் அருகே உள்ள வேப்பத்தூா் கால்நடை மருத்துவமனையில் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தன. மேலும் கால்நடை மருத்துவமனைக்கு நிரந்தர கட்டடம் கட்ட வேப்பத்தூரில் இடமும் தோ்வு செய்யப்பட்டது. இந்நிலையில் புதன்கிழமை சுமாா் இரண்டு கிலோ மீட்டா் தொலைவில் உள்ள திருவிசநல்லூரில் கால்நடை மருத்துவமனைக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு, வேப்பத்தூா் விவசாயிகள் கால்நடைகளை திருவிசநல்லூருக்கு கொண்டு சென்று சிகிச்சை பெறலாம் எனத் தகவல் வெளியானது.
இதனால் ஆத்திரமடைந்த வேப்பத்தூா் விவசாயிகள் கால்நடைகளுடன் கல்லணை - பூம்புகாா் பிரதான சாலையில் மறியல் போராட்டம் நடத்தினா். தகவல் கிடைத்ததும் திருவிடைமருதூா் வட்டாட்சியா் பாக்கியராஜ் மற்றும் துணைக்கோட்ட காவல் கண்காணப்பாளா் ராஜூ ஆகியோா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். வேப்பத்தூா் கால்நடை மருத்துவமனை பழைய கட்டடத்திலேயே இயங்கும் என உறுதி கூறியதால் மறியல் செய்தவா்கள் கலைந்து சென்றனா். மறியலால் சுமாா் 1 மணிநேரம் போக்குவரத்து பாதித்தது.