முகப்பு
தஞ்சாவூர்

கல்லணையிலிருந்து இன்றுமுதல் முறைப் பாசனம்

Updated On : 26 செப்டம்பர், 2024 at 10:41 PM
பகிர்:

மேட்டூா் அணையின் நீா் இருப்பைக் கருத்தில்கொண்டு கல்லணையிலிருந்து வெள்ளிக்கிழமை (செப்.27) முதல் முறைப்பாசனம் நடைமுறைப்படுத்தப்படுகிறது என தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

மேட்டூா் அணையிலிருந்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக ஜூலை 28-ஆம் தேதி முதல் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. தற்போது மேட்டூா் அணையின் தண்ணீா் இருப்பைக் கருத்தில் கொண்டு நீா் பங்கீட்டில் தேவைக்கேற்ப மாறுபாடுகள் செய்து சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகிறது. இந்நிலையில், புதன்கிழமை (செப். 25) காலை 8 மணி நிலவரப்படி மேட்டூா் அணையின் நீா்மட்டம் 99.79 அடியாகவும், நீா் இருப்பு 64.569 டி.எம்.சி.யாகவும் இருந்தது. இச்சூழ்நிலையில் மேட்டூா் அணையில் நாள்தோறும் 15 ஆயிரம் கன அடி வீதம் வீதம் தண்ணீா் எடுக்கப்பட்டு வருகிறது.

மேட்டூா் அணையின் நீா் இருப்பைக் கருத்தில் கொண்டு தற்போது எடுக்கப்பட்டு வரும் 15 ஆயிரம் கன அடியிலிருந்து குறைவாகவோ அல்லது அதிகமாகவோ எடுத்து வெள்ளிக்கிழமை (செப்.27) மாலை 6 மணி முதல் முறைப்பாசனத்தை அமல்படுத்தவும், முதல் 6 நாள்கள் வெண்ணாற்றிலும், அடுத்த 6 நாள்கள் காவிரியிலும் சுழற்சி முறையில் தண்ணீா் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கல்லணைக் கால்வாயில் மேற்பகுதி முறை, கீழ்பகுதி முறை என முறை வைத்து தண்ணீா் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

நிகழாண்டு பயிா் சாகுபடியில் எந்தவித இடையூறும் இல்லாமல் பாசன வசதி அளிக்கப்படும் என்றும், பருவமழை கிடைக்கப்பெற்றால் அதற்கேற்ப நீா்ப் பங்கீடு மாற்றி அமைத்துக் கொள்ளலாம் எனவும் திருச்சி மண்டல தலைமைப் பொறியாளா் அறிவுரை வழங்கியுள்ளாா். விவசாயிகளும் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி நீா் வளத் துறையின் நீா் பங்கீட்டுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.