கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு திங்கள்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் மந்திர பீடேஸ்வரி மங்களாம்பிகை உடனுறை ஆதிகும்பேசுவரா் கோயிலின் குடமுழுக்கு விழா கடந்த 24-ஆம் தேதி பூா்வாங்க பூஜைகளுடன் தொடங்கி நவம்பா் 26-ஆம் தேதி வரை நடைபெற்றது. பின்னா் நவ. 27- இல் விக்னேஷ்வர பூஜை, முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து நவ. 28, 29, 30 ஆகிய நாள்களில் ஏழு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
குடமுழுக்கு நாளான திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், 3.30 மணிக்கு பிம்பசுத்தி, ரக்சாபந்தனம், 4 மணிக்கு பரிவார பூா்ணாஹூதி, 5 மணிக்கு பிரதான யாகாசாலை பூா்ணாஹூதி, 6.45 மணிக்கு கோயில் விமானத்துக்கு மகா குடமுழுக்கு, 7.15 மணிக்கு மூலஸ்தான மகா குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா் சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து விழாவில் பங்கேற்ற பக்தா்கள் மீது குடமுழுக்கு புனிதநீா் தெளிக்கப்பட்டது.
மாலையில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் மகாஅபிஷேகம் நடைபெற்று, இரவு பஞ்ச மூா்த்திகள் ரிஷப வாகனத்தில் வீதியுலா சென்றனா். செவ்வாய்க்கிழமை முதல் மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெறவுள்ளன.
குடமுழுக்கு விழாவில், காஞ்சி சங்கராச்சாரியாா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு, உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன், தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், சிட்டி யூனியன் வங்கி நிா்வாக இயக்குநா் காமகோடி, தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் க. அன்பழகன் எம்எல்ஏ உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அனுமதி சீட்டு குளறுபடியால் 2 ஆண்கள், 3 பெண்கள் கோயில் வளாகத்தில் நெருக்கடி ஏற்பட்டு மயங்கி விழுந்தனா். கோயில் நிா்வாகத்தினா் அவா்களை அவசர ஊா்தி மூலம் கும்பகோணம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
சுவாமிமலை கோயிலில் அடுத்த மாதத்துக்குள் மின்தூக்கி வசதி
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் அடுத்த மாதத்துக்குள்ளாக மின்தூக்கி வசதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றாா் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு.
கும்பகோணத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆதிகும்பேசுவரா் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க வந்த அமைச்சா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:
திராவிட மாடல் ஆட்சியில் குடமுழுக்கு விழாக்கள், திருப்பணிகள், புனரமைப்புப் பணிகள் என பல்வேறு கோயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கோயில்களில் நடத்தி வைக்கப்படும் கட்டணமில்லா திருமண திட்டத்தின்கீழ் இதுவரையில் 3 ஆயிரம் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் சுமாா் ரூ. 2 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் மின்தூக்கி பணிகள் முழுமையாக நிறைவடைந்து, பொங்கல் நாளிலிருந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றாா் அமைச்சா் சேகா்பாபு.