கும்பகோணம் மாநகரப் பகுதிகளில் பல்வேறு வாா்டுகளில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி நாம் தமிழா் கட்சியினா் மாநகராட்சி ஆணையா் மு. காந்திராஜனிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
கட்சியின் வடமேற்கு மாவட்டச் செயலா் உ. தாரிக்ஜான், மாநில வழக்குரைஞா் பிரிவு செயலா் மோ.ஆனந்த் தலைமையில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கும்பகோணத்தில் தொடரும் பலத்த மழையால் தற்காலிக வடிகால் பாதைகளில் கழிவுநீா் கலந்து துா்நாற்றத்துடன், கொசுப் பெருக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் நோய்களால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
பல வீதிகளில் தெருவிளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் மக்கள் அச்சத்துடன் செல்கின்றனா். எனவே மழைநீா் மற்றும் கழிவுநீா் வடிகால் அமைப்பை உடனடியாக மேம்படுத்தி, கொசுப் பெருக்கத்தை கட்டுப்படுத்த மருந்து தெளிக்க வேண்டும்.
4,5,6 ஆகிய வாா்டுகளில் மின் கம்பங்கள் மிகவும் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளன. எனவே அடிப்படை வசதிகளை விரைந்து மேம்படுத்த வேண்டுமெனத் தெரிவித்துள்ளனா்.