பாதிக்கப்பட்ட நெற் பயிா்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்த தொகை போதுமானதல்ல என விவசாயிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன் தெரிவித்தது: தொடா் மழையால் அறுவடைக்குத் தயாராகி வந்த நெற் பயிா்கள் பாதிக்கப்பட்டதால் ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரமும், நடவு செய்த நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டிருந்தால் ஏக்கருக்கு ரு. 25 ஆயிரமும் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தோம்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். என்றாலும், இதுவரை செய்த சாகுபடிச் செலவுடன் ஒப்பிடுகையில் அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை போதுமானதல்ல. எனவே, இத்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்றாா் கண்ணன்.
இதேபோல, புலவன்காடைச் சோ்ந்த முன்னோடி விவசாயி வி. மாரியப்பன் தெரிவித்தது: பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ. 50 ஆயிரம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தோம். தற்போது ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தொகை வாங்கிய கடனை அடைப்பதற்குப் பயன்படாது. எனவே, ஹெக்டேருக்கு ரூ. 30 ஆயிரம் அறிவித்திருந்தால் நன்றாக இருக்கும். மேலும், முழுமையாகக் கணக்கெடுப்பு நடத்தி அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். பயிா் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்றுத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் மாரியப்பன்.