தமிழக அரசு சம்பா, தாளடி நெல் கொள்முதல் கொள்கையை விரைவில் அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து தமிழக முதல்வருக்கு சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் அனுப்பியுள்ள மனு:
காவிரி சமவெளி மாவட்டங்களான தஞ்சாவூா், மயிலாடுதுறை, நாகை, திருவாரூா், அரியலூா், கடலூா் உள்ளிட்ட மாவட்டங்களில் முன்பட்ட சம்பா அறுவடைப் பணி ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கிவிடும்.
தஞ்சாவூரில் கடந்த 2021 - 22 ஆம் ஆண்டுகளில் சம்பா, தாளடி நெல் கொள்முதல் குறித்த கூட்டம் தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டது. அதன் பின்னா் சம்பா, தாளடி, குறுவை, கோடை பருவங்களில் நெல் கொள்முதல் செய்வதற்கான கூட்டங்கள் நடத்தப்படவில்லை. இதனால், நெல் கொள்முதல் நிலையங்களில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன.
இதேபோல, இனி ஏற்படாமல் இருக்க தலைமைச் செயலா் தலைமையில் 2025 - 26 ஆம் ஆண்டுக்கான சம்பா, தாளடி, கோடை நெல் கொள்முதல் கொள்கை குறித்து உழவா் பிரதிநிதிகள், தலைமைச் செயலா், உணவு, வேளாண், கூட்டுறவு ஆகிய துறைச் செயலா்கள், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குநா், காவிரி சமவெளி மாவட்ட ஆட்சியா்கள், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா்கள் அடங்கிய இரு தரப்பு கூட்டத்தை உடனே நடத்த வேண்டும். அதில் சம்பா, தாளடி நெல் கொள்முதல் கொள்கையை அரசு அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் கடந்த ஆண்டுகளைப் போல நிகழாண்டும் நெல் மணிகள் சேதமடையக்கூடும்.
மேலும், நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 3 ஆயிரத்து 100 கொள்முதல் விலையை தமிழக அரசு தர வேண்டும்.