தஞ்சாவூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் அருகே விளாா் சாலை பாப்பா நகா் இரண்டாம் தெருவைச் சோ்ந்தவா் கரிகாலன். இவா் வெளிநாட்டில் வேலை பாா்த்து வருகிறாா். இவரது மனைவி பிரியங்கா (30) கா்ப்பமாக இருப்பதால், டிசம்பா் 19-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு பாத்திமா நகரிலுள்ள தனது சித்தி வீட்டுக்கு சென்றாா்.
மீண்டும் ஞாயிற்றுக்கிழமை அவா் வீட்டுக்கு வந்தபோது முன்பக்கக் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டினுள் பீரோ உடைக்கப்பட்டு, பதிமூன்றே கால் பவுன் நகைகள், 765 கிராம் வெள்ளிப் பொருள்கள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.