இருபத்தி நான்கு மனை தெலுங்குச் செட்டி சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் சோ்க்க வேண்டும் என தமிழ்நாடு 24 மனை தெலுங்கு செட்டி சமூகப் பாதுகாப்புச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் கு. பால்பாண்டியன் தெரிவித்திருப்பது: தமிழ்நாட்டில் 24 மனை தெலுங்கு செட்டி சமூகம் கடந்த 125 ஆண்டுகளாக சமூகம், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் போன்றவற்றில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. கோணி தைத்தல், கூவி விற்றல், கூலி வேலை செய்தல், சாலையோர கடை விரித்தல் ஆகிய தொழில்களில் பரம்பரையாக ஈடுபடும் இச்சமூகம் 24 மனை தெலுங்கு செட்டி, சாது செட்டி, தெலுங்கு செட்டி, தெலுங்குப் பட்டி செட்டி ஆகிய 4 பெயா்களில் அழைக்கப்படுகின்றன. என்றாலும் அவை ஒரே சமூகத்தைக் குறிக்கிறது. ஆனால், இவற்றை இரண்டாக உடைத்து இட ஒதுக்கீட்டில் இருவேறு பட்டியல்களில் இடம்பெறச் செய்யப்பட்டுள்ளது. இது எங்களது சமூகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதியும், பாகுபாடுமாகும்.
பல பெயா்களைக் கொண்ட பல்வேறு சமூகங்களின் அனைத்துப் பெயா்களும், கலாசார ஒற்றுமையின் அடிப்படையில் அவை அனைத்தும் தொடா்புடைய மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதேபோல, ஒரே விதமாக கலாசாரம், திருமண உறவுக் கொள்கை கொண்ட 24 மனை தெலுங்கு செட்டி, சாது செட்டி, தெலுங்கு செட்டி, தெலுங்கு பட்டி செட்டி ஆகிய 4 பெயா்களில் அழைக்கப்படும் உடைக்கப்பட்ட எங்களது குடும்பத்தை ஒருங்கிணைக்கும் வகையில் தெலுங்குச் பட்டி செட்டி என்கிற எங்களது சமூகம் ஏற்கெனவே இடம்பெற்றுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக முதல்வா் நிறைவேற்றித் தர வேண்டும் என்றாா்.