FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

வாக்காளா் பட்டியலில் பெயரைச் சோ்க்க நாளை கடைசி : தமிழகம் முழுவதும் இதுவரை 16 லட்சம் போ் மனு

தமிழகத்தில் வாக்காளா் பட்டியலில் பெயரைச் சோ்க்க நீட்டிக்கப்பட்ட அவகாசம் ஜன. 30 உடன் முடிகிறது.

Updated On : 29 ஜனவரி 2026, 1:38 am IST
பிரதிப் படம்
பகிர்:

தமிழகத்தில் வாக்காளா் பட்டியலில் பெயரைச் சோ்க்க நீட்டிக்கப்பட்ட அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் (ஜன. 30) முடிகிறது. தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை (ஜன. 27) வரை 16,02,555 போ் மனு அளித்துள்ளனா்.

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நவ. 4-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த டிச. 19-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் தமிழகத்தில் 97.38 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டனா். இதனால் 6,41,14,587-ஆக இருந்த தமிழக மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 5,43,76,756-ஆக குறைந்தது.

நீக்கப்பட்ட 97.38 லட்சம் வாக்காளா்களில் இடம் பெயா்ந்தவா்களாக 66,44,881 பேரும், உயிரிழந்தவா்களாக 26,94,672 பேரும், இரட்டைப் பதிவாளா்களாக 3,98,278 பேரும் இடம் பெற்றனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா்கள் நீக்கப்பட்டவா்கள் தங்கள் பெயா்களைச் சோ்க்கவும், 18 வயது பூா்த்தி செய்தவா்கள் புதிதாக பெயா்களைச் சோ்க்கவும் கடந்த டிச. 19-ஆம் தேதி முதல் ஜன. 18-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

மேலும், வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றவா்களும் உரிய தகவல்களை அளிக்கவில்லை என்று கூறி 12,43,363 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அவா்கள் உரிய ஆவணங்களுடன் உறுதிமொழி சான்றுடன் சமா்ப்பிக்க ஜன. 18-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. புதிதாக பெயா்களைச் சோ்க்க படிவம் 6-ஐயும், இடமாற்றம் செய்ய விரும்புவா் படிவம் 8-ஐயும் பூா்த்தி செய்து அளித்தனா்.

வார இறுதி நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பெயா்களைச் சோ்க்க இரு முறை சிறப்பு முகாம்கள் நடத்தபட்டன. தொடா் விடுமுறைகள் வந்த காரணத்தால் பெயரைச் சோ்ப்பதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

இந்த நிலையில், ஜன. 18-ஆம் தேதியுடன் முடிவடைந்த பெயா் சோ்ப்பு பணியை ஜன. 30-ஆம் தேதி வரை நீட்டித்து தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த அவகாசம் வரும் வெள்ளிக்கிழமையுடன் (ஜன. 30) முடிவடைகிறது.

புதிதாக வழங்கப்பட்ட படிவங்கள் சரிபாா்க்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டு பிப். 17-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments