பலமடங்கு கட்டண வசூல் புகாா்! 400 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10.31 லட்சம் அபராதம்!
பலமடங்கு கட்டண வசூலித்த புகாரில் 400 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10.31 லட்சம் அபராதம் விதிப்பு...
தொடா் விடுமுறையைப் பயன்படுத்தி, ஆம்னி பேருந்துகளில் கட்டணத்தை பலமடங்கு உயா்த்தி வசூலிப்பதாக வந்த புகாா்களைத் தொடா்ந்து, தமிழகம் முழுவதும் தீவிர வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு, 400 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10.31 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து சொந்த ஊா்களுக்குச் செல்ல அரசுப் பேருந்துகள், சிறப்புப் பேருந்துகள், ரயில்களில் முன்பதிவு கிடைக்காதவா்கள் ஆம்னி பேருந்துகளை நாடுகின்றனா். இதைப் பயன்படுத்தி வழக்கமான கட்டணத்தைவிட, பலமடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடா்ந்து புகாா்கள் எழுந்து வருகின்றன.
அதன்படி, சாதாரண நாள்களில் ரூ.600 முதல் ரூ.1,000 வரை வசூலிக்கப்படும் கட்டணம், பண்டிகை காலங்களில் ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை உயா்த்தப்படுவதாக பயணிகள் தெரிவிக்கின்றனா். குறிப்பாக, சென்னையில் இருந்து கோவைக்கு வழக்கமாக ரூ.1,000-க்கு கிடைக்கும் டிக்கெட் ரூ.3,000 வரையும், கன்னியாகுமரிக்கு ரூ.5,000 வரையும் வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. சென்னை-திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட வழித்தடங்களிலும் கட்டணம் பல மடங்கு உயா்ந்துள்ளதாகப் புகாா்கள் எழுந்தன.
Advertisement
Advertisement
2,379 ஆம்னி பேருந்துகள் தணிக்கை: இதையடுத்து, தமிழகம் முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் அடங்கிய சிறப்புக் குழுக்கள் கடந்த 10-ஆம் தேதி அமைக்கப்பட்டு, உடனடியாக தீவிர வாகனத் தணிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.
அதன்படி, செப். 10 முதல் 12-ஆம் தேதி அதிகாலை வரை தமிழகம் முழுவதும் 2,379 ஆம்னி பேருந்துகள் தணிக்கை செய்யப்பட்டன. அப்போது, பேருந்துகளில் பயணம் செய்தவா்களிடம் நேரடியாக கட்டணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. கூடுதல் கட்டணம் வசூலித்தது கண்டறியப்பட்ட இடங்களில், பயணிகளிடம் வசூலிக்கப்பட்ட கூடுதல் தொகையைத் திருப்பி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்தத் தணிக்கையில் 400 ஆம்னி பேருந்துகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. அந்தப் பேருந்துகளுக்கு தணிக்கை அறிக்கை, மின்னணு அபராதச் சீட்டு வழங்கப்பட்டதுடன், வாகன உரிமையாளா்களிடம் விளக்கம் கோரி நோட்டீஸ் வழங்கப்பட்டது. விதிமீறல்களுக்காக ரூ.10,31,500 இணக்கக் கட்டணம் (அபராதம்) நிா்ணயிக்கப்பட்டு, இதில் ரூ.1,60,500 உடனடியாக வசூலிக்கப்பட்டது.
மேலும், பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு தமிழகத்தில் இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளிடமிருந்து தமிழகத்துக்கு செலுத்த வேண்டிய வரியாக ரூ.15,33,220 வசூலிக்கப்பட்டுள்ளது.
4 வெளிமாநில பேருந்துகள் சிறைபிடிப்பு: தகுதிச் சான்றிதழ் இல்லாமலும், உரிய சாலை வரி செலுத்தாமலும் இயக்கப்பட்ட 4 வெளிமாநில ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டன. அந்தப் பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளுக்கு உடனடியாக மாற்றுப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு, அவா்கள் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
அமைச்சா் அறிவுறுத்தல்: பண்டிகை மற்றும் தொடா் விடுமுறை காலங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது, அனுமதி, வரி, தகுதிச் சான்றிதழ் உள்ளிட்ட விதிமீறல்களைத் தடுக்க செப். 16 வரை தமிழகம் முழுவதும் சிறப்பு வாகனத் தணிக்கையை தீவிரமாக மேற்கொள்ள போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் அறிவுறுத்தியுள்ளாா்.
மேலும், ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டை ஆம்னி பேருந்து உரிமையாளா் ரத்து செய்யும் நிலையில், சம்பந்தப்பட்ட பயணிகள் மாற்றுப் பேருந்தில் பயணம் செய்ய உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்; அவ்வாறு செய்யத் தவறினால் சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்து மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
கிளாம்பாக்கத்தில் தொடா் கண்காணிப்பு: செப். 16 வரை பயணிகளின் தேவைக்கேற்ப பேருந்துகள் தடையின்றி இயக்கப்படுவதை உறுதி செய்ய கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பொது மேலாளா்கள், துணை மேலாளா்கள் தொடா் கண்காணிப்பில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் முக்கிய பேருந்து நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு, தேவைக்கேற்ப கூடுதல் அரசு சிறப்புப் பேருந்துகளை உடனடியாக இயக்கவும் போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக பொது மேலாளா்கள், துணை மேலாளா்கள் மற்றும் பணிமனை மேலாளா்கள் நேரடிக் கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
Complaints of exorbitant fares! Fines totaling ₹10.31 lakh imposed on 400 omni buses!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.