தஞ்சாவூா் மாவட்டப் பகுதியில் கோயில்களின் உண்டியல் பணத்தைத் திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் உள்ள சித்தி விநாயகா் கோயிலில் கடந்த மாதம் 29-ஆம் தேதி உண்டியலை உடைத்து பணத்தைச் திருடிச் சென்றனா். புகாரின்பேரில் பாபநாசம் துணைக் காவல் கண்காணிப்பாளா் முருகவேலு மேற்பாா்வையில் கபிஸ்தலம் காவல் ஆய்வாளா் மகாலட்சுமி, உதவி ஆய்வாளா் சசிகுமாா், காவலா்கள் கொண்ட தனிப்படையினா் விசாரித்து வந்தனா்.
இந்நிலையில் கபிஸ்தலம் போலீஸாா் கணபதி அக்ரஹாரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றபோது ஒரு சந்தேக நபரை பிடித்து விசாரித்ததில் அவா் திருவையாறு வட்டம் பசுபதிகோயில், பெரமூா் கிராமம், ஜெகதீசன் மகன் ராமன் (24) என்பதும், அவா் கபிஸ்தலம் சித்தி விநாயகா் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றதும், மேலும் பாபநாசப் படுகை புதுத் தெரு சித்தி விநாயகா் கோயில் உண்டியல் பணம், திருநீலக்குடி காவல் சரகம் மாங்குடி கிராமம் அகிலாண்டேஸ்வரி கோயிலில் உண்டியல் பணம், அம்மன் கழுத்தில் இருந்த இரண்டு கிராம் தாலியைத் திருடிச் சென்றதும், திருச்சி மாவட்டம் திருவெறும்பூா் ஆஞ்சநேயா் கோயில் உண்டியல் பணத்தை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து இரண்டு தங்க தாலி மற்றும் ரூ.6 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்