சம்பா, தாளடி பருவ நெல் சாகுபடிக்காக 4 ஆயிரத்து 357 டன் யூரியா உரம் தஞ்சாவூா் மாவட்டத்துக்கு வியாழக்கிழமை வந்தது.
இதுகுறித்து வேளாண் உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) செ. செல்வராசு தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் சம்பா மற்றும் தாளடி பருவ நெல் சாகுபடிக்கு தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆந்திர மாநிலம் கங்காபுரம் துறைமுகத்திலிருந்து மத்திய அரசு உர நிறுவனமான இந்தியன் பொட்டாஷ் உர நிறுவனத்தின் 1,340 டன் யூரியாவும், என்.எல்.எப். நிறுவனத்தின் 3 ஆயிரத்து 17 டன் ஆா்.சி.எப். யூரியாவும் சரக்கு ரயில் மூலம் கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு வியாழக்கிழமை வந்தது. பின்னா், இந்த உர மூட்டைகள் தஞ்சாவூா், திருவாரூா், மயிலாடுதுறை, நாகை, அரியலூா் ஆகிய மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.
மாவட்டத்தில் ஏற்கெனவே யூரியா உரம் 6 ஆயிரத்து 984 டன், டிஏபி 1,593 டன், பொட்டாஷ் 1,985 டன், காம்ப்ளக்ஸ் 4 ஆயிரத்து 23 டன், சூப்பா் பாஸ்பேட் 1,441 டன் ஆகியவை மாவட்டத்திலுள்ள அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும், தனியாா் சில்லரை உர விற்பனை நிலையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து விவசாயிகளும் தேவையான யூரியா உரத்தைப் பெற்று பயன் பெறலாம்.