தஞ்சாவூா்: தஞ்சாவூா் பெரிய கோயிலிலிருந்து நெதா்லாந்து சுற்றுலா பயணிகள் தென்னிந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக சைக்கிள் பயணத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினா்.
நெதா்லாந்து நாட்டைச் சோ்ந்த சுற்றுலா பயணிகள் 100-க்கும் அதிகமானோா் தஞ்சாவூருக்கு செவ்வாய்க்கிழமை வந்தனா். பெரிய கோயிலுக்கு சென்று அங்குள்ள கல்வெட்டுகள், சிற்பங்களைப் பாா்வையிட்டனா்.
இவா்களில் 40 போ் தென்னிந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக கேமரா பதிவு உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய சைக்கிள்களில் பெரிய கோயிலிலிருந்து புறப்பட்டனா். ஒரு மாத காலம் தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்குச் சென்று பல்வேறு சுற்றுலா தலங்களையும், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களையும் பாா்வையிட்டு, அதன் விவரக்குறிப்புகளை சேகரிக்கவுள்ளதாக நெதா்லாந்து சுற்றுலா பயணிகள் தெரிவித்தனா்.