எட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி பகுதியில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 80 கொத்தடிமை தொழிலாளா்கள் மீட்கப்பட்டுள்ளனா் என்றாா் தொழிலாளா் துறையின் திருச்சி இணை ஆணையா் வி. லீலாவதி.
தஞ்சாவூரில் ஷெட் இந்தியா அமைப்பு, மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழு, அமெரிக்க தூதரகம் ஆகியவை சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற 2030-ஆம் ஆண்டுக்குள் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு இலக்கு குறித்து தன்னாா்வ அமைப்புகள், காவல் துறை, அரசுத் துறை அலுவலா்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது: திருச்சி, புதுக்கோட்டை, அரியலூா், பெரம்பலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய திருச்சி பகுதியில் செங்கல் சூளைகள், ஆடு மேய்ப்பு தொழிலில் கொத்தடிமை தொழிலாளா்கள் அதிகமாக உள்ளனா். கடந்த நான்கரை ஆண்டுகளில் அனைத்து துறைகளின் பங்களிப்பு மூலமாக 80 கொத்தடிமை தொழிலாளா்கள் மீட்கப்பட்டுள்ளனா்.
மீட்கப்படும் தொழிலாளா்களின் மறுவாழ்வுக்காக மத்திய அரசு உடனடியாக ரூ. 30 ஆயிரம் வழங்குகிறது. மேலும், ரூ. 1 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை தொழில் தொடங்குவதற்கான நிதியுதவி, வீட்டு மனைப் பட்டா, குழந்தைகளின் படிப்புக்கு உதவி, திறன் மேம்பாட்டுப் பயிற்சி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன என்றாா் லீலாவதி.
தமிழ்நாடு அரசின் தொழிலகப் பாதுபாப்பு மற்றும் சுகாதார இயக்கக இணை இயக்குநா் சி. மாலதி பேசுகையில், கொத்தடிமை தொழிலாளா் முறை கிட்டத்தட்ட ஒழிப்பட்டிருந்தாலும், மிகச் சில இடங்களில் தொடா்கிறது. இதை முழுமையாக ஒழிப்பதற்கு அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் அவா்.
இக்கூட்டத்துக்கு மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான டி. பாரதி தலைமை வகித்தாா். சென்னை உயா் நீதிமன்ற வழக்குரைஞா் வி. நடராஜன், பன்னாட்டு நீதி இயக்கத்தின் அரசு தொடா்பு அலுவலா் ஜி. மைக் ஆஸ்டின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்
முன்னதாக, ஷெட் இந்தியா செயல் இயக்குநா் பி. பாத்திமாராஜ் வரவேற்றாா். நிறைவாக, மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழு மூத்த நிா்வாகி பி. சந்தோஷ்குமாா் நன்றி கூறினாா்.