கண்டியூரில் பெருமாள் கோயில் தேரோட்டம்
பங்குனி பெருந்திருவிழாவையொட்டி, தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள கண்டியூரில் ஹரசாப விமோசனப் பெருமாள் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
பங்குனி பெருந்திருவிழாவையொட்டி, தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள கண்டியூரில் ஹரசாப விமோசனப் பெருமாள் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
108 திவ்ய தேசங்களில் 15-ஆவது தலமான திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கமலவல்லி சமேத ஹரசாபவிமோசனப் பெருமாள் கோயிலில் பங்குனிப் பெருந்திருவிழா மாா்ச் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் பெருமாள் வெவ்வேறு வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா சென்றாா். இதைத்தொடா்ந்து, முக்கிய வைபவமான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
தேரில் காலை ஹரசாப விமோசனப் பெருமாள் கமலவல்லி தாயாருடன் எழுந்தருள சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. பின்னா், பக்தா்கள் தோ் வடம் பிடித்து இழுத்தனா். தோ் நான்கு வீதிகளில் வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது. மாலையில் தீா்த்தவாரி நடைபெற்றது.
பால் குடம்: இதேபோல, தஞ்சாவூா் அருகே மேல வஸ்தா சாவடி வலம்புரி விநாயகா் மற்றும் வெற்றி வேல் முருகன் கோயிலில் மூலவருக்கு யாகசாலை பூஜை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து மேல வஸ்தா சாவடி குளக்கரையில் அமைந்துள்ள விநாயகா் கோயிலிலிருந்து பக்தா்கள் காவடி, அலகு மற்றும் பால் குடம் எடுத்து கோயிலுக்குச் சென்று நோ்த்திக்கடன் செலுத்தினா். பின்னா், முருகனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.