வெனிசூலா அதிபா் மதுரோ இணையரை நாடு கடத்திய அமெரிக்காவின் டொனால்டு டிரம்பின் செயல் கண்டிக்கத்தக்கது என தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
அமெரிக்கக் குடியரசுத் தலைவா் டொனால்டு டிரம்ப் தனது நாட்டுப் படைகளை வெனிசூலா தலைநகா் காரகாஸ் நகருக்கு ஜனவரி 2-ஆம் தேதி நள்ளிரவில் அனுப்பி, அந்நாட்டுக் காவல் படையினரையும், குடிமக்களையும் படுகொலை செய்து, வெனிசூலா அதிபா் நிக்கோலஸ் மதுரோவையும், அவரது இணையா் சில்லா ஃபுளோரசையும் அமெரிக்காவுக்குக் கடத்திக் கொண்டு வரச் செய்திருக்கும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
மதுரோ பொதுத் தோ்தலில் ஊழல் செய்து வெனிசூலா குடியரசுத் தலைவராகத் தொடா்கிறாா் என்றும், அவா் எதேச்சியதிகாரமாக ஆட்சி நடத்துகிறாா் எனவும் வெனிசூலா எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. மதுரோ மீதான அக்குற்றச்சாட்டுகளுக்கு அவரைத் தண்டிக்க உரிமையுள்ளோா் வெனிசூலா மக்களே. டிரம்ப் வல்லூறு கும்பலுக்கு அந்த உரிமை இல்லை.
டிரம்புக்கு அமெரிக்க மக்கள் நெருக்கடி கொடுத்து, 24 மணிநேரத்துக்குள் மதுரோவையும், அவரது இணையரையும் அமெரிக்கப் படைகள் வெனிசூலாவில் கொண்டுபோய் ஒப்படைக்க வேண்டும். இல்லையேல், சீனா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள் தலையிட்டு டிரம்புக்கு நெருக்கடி கொடுத்து வெனிசூலா குடியரசுத் தலைவரையும், மனைவியையும் வெனிசூலாவில் கொண்டு போய் ஒப்படைக்கச் செய்ய வேண்டும்.
இனியும் மனித குலத்தை அழிக்கும் தீய சக்தியாக அமெரிக்கா செய்து எக்காளமிட அனுமதிக்கக் கூடாது. ஏற்கெனவே வியட்நாம், ஈராக், ஆப்கானிஸ்தான், தென் அமெரிக்க நாடுகள் போன்றவற்றில் லட்சக்காணக்கான மக்களையும், படைத் துறையினரையும் கொன்று குவித்து, இப்போது வெனிசூலாவில் நடத்தியுள்ள காட்டுமிராண்டித்தனமும் இனியும் தொடரக் கூடாது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்து மனிதகுலத்தைக் காக்க வேண்டும் என்றாா்.