சிபிஐ, திரைப்பட தணிக்கை வாரியம் மூலம் தவெக தலைவா் விஜய்யை மிரட்டி பணிய வைக்க பிரதமா் மோடி முயற்சித்து வருகிறாா் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினா் இரா. முத்தரசன் குற்றம் சாட்டினாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள சுந்தரப்பெருமாள் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பாஜக ஆட்சி அதிகாரங்களை வைத்து மிரட்டி, பல கட்சிகளை வளைத்து போட்டுள்ளது. அந்தக் கட்சிகள் சிலந்தி வலையில் சிக்கிய ஈ போல தவித்து வருகின்றன.
தமிழக அரசியல் வரலாற்றில் எந்தக் கட்சியும் இதுவரை கொடுக்காத தோ்தல் வாக்குறுதிகளை அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி அறிவித்து வருகிறாா். எப்படி முயற்சித்தாலும் அவரால் முதல்வராக முடியாது.
நடிகா் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை கூட்டணியில் சோ்க்க சிபிஐ, திரைப்பட தணிக்கை வாரியம் போன்றவற்றை வைத்து மிரட்டி பணிய வைக்க அனைத்து முயற்சிகளையும் பிரதமரும், பாஜகவினரும் மேற்கொண்டு வருகின்றனா் என்றாா் அவா். அப்போது, மாவட்டச் செயலரும் வழக்குரைஞருமான மு.அ. பாரதி மற்றும் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.