ஜன நாயகன் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் ஜன. 9 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், தணிக்கை வாரியம் தரப்பிலிருந்து மறு ஆய்வு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றத்தை நாடி தணிக்கைச் சான்றிதழை உடனடியாக பெற்றுத்தர வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கின் விசாரணை கடந்த சில நாள்களாக நடந்து வந்தது. இதில், தணிக்கை வாரியம் மற்றும் ஜன நாயகன் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரடக்ஷன்ஸ் வாதங்களைக் கேட்ட உயர்நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பை இன்று வழங்கியது.
அதில், மத ரீதியான கருத்துகள் படத்தில் இடம்பெறுவதை ஏற்க முடியாது என்றும் தணிக்கை வாரியத்தின் மேல்முறையீட்டை ஏற்று, தனி நீதிபதி பி.டி. ஆஷாவின் தீர்ப்பை ரத்து செய்வதாகவும் நீதிபதிகள் அமர்வு அறிவித்தது.
மேலும், தணிக்கை வாரியம் பதிலளிக்க உரிய கால அவகாசம் அளித்து, மீண்டும் விசாரணை நடத்த தனி நீதிபதி பி.டி. ஆஷாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பிப்ரவரி வெளியீடாக ஜன நாயகன் திரைக்கு வராது என்றே தெரிகிறது.
ஒருவேளை, பிப்ரவரியில் தணிக்கை பிரச்னைகள் முடிந்தாலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருமானால், ஏதேனும் அரசியல் கட்சி, வேட்பாளர் அல்லது சித்தாந்தங்களை ஊக்குவிக்கும் அல்லது பாதிக்கும் உள்ளடக்கத்துக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படும்.
ஒரு திரைப்படம் பிரசார நோக்கில் வாக்காளர்களை சென்றடையக் கூடும் என்று தேர்தல் ஆணையம் கருதினால், அந்த படத்தின் திரையிடல்கள், விளம்பரங்கள் உள்ளிட்டவற்றை நிறுத்துவதற்கு அதிகாரம் உள்ளது.
இதனால், ஜன நாயகன் திரைப்படம் வெளியாவதற்கான வாய்ப்புகள் கடும் சிக்கலைச் சந்தித்துள்ளதால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தை அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.