தஞ்சாவூா் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்ட வழக்கில் தமிழக அமைச்சா், மாநிலங்களவை உறுப்பினா், சட்டப்பேரவை உறுப்பினா், துணை மேயா் ஆகிய 4 போ் திங்கள்கிழமை விடுதலை செய்யப்பட்டனா்.
ஜல்லிக்கட்டுப் போட்டி தடைக்கு எதிராகவும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் 2017, ஜனவரியில் போராட்டம் நடைபெற்றது.
இதையொட்டி, கும்பகோணத்தில் 2017, ஜனவரி 20-ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் மற்றும் ஆா்ப்பாட்டத்தில் தற்போதைய மாநிலங்களவை திமுக உறுப்பினா் எஸ். கல்யாணசுந்தரம் தலைமையில் திமுகவினா் ஈடுபட்டனா்.
இதுதொடா்பாக, தற்போதைய உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன், எஸ். கல்யாணந்தரம், சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன், கும்பகோணம் தற்போதைய துணை மேயா் சு.ப. தமிழழகன், கே.என். செல்வராஜ் ஆகியோா் மீது கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிவு செய்தனா். பின்னாளில் உடல் நலக்குறைவால் செல்வராஜ் காலமானாா்.
இந்த வழக்கு தஞ்சாவூரிலுள்ள நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த விசாரணை முடிவடைந்ததைத் தொடா்ந்து, திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, இந்த வழக்கு தொடா்பாக உரிய ஆவணங்கள் நீதிமன்றத்தில் அளிக்கப்படாததால், அமைச்சா் கோவி. செழியன், எஸ். கல்யாணசுந்தரம், க. அன்பழகன், சு.ப. தமிழழகன் ஆகியோரை வழக்கிலிருந்து விடுதலை செய்து நீதிபதி கனிமொழி உத்தரவிட்டாா்.