தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் கைப்பேசி கடையில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகளை திருடிச் சென்ற நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் தெற்கு ராஜ வீதியில் கைப்பேசி கடை நடத்தும் செல்லப்பா என்கிற ராஜ்முகம்மது (37) கடந்த சனிக்கிழமை கடைக்கு வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகள் மற்றும் உதிரிப் பாகங்கள் திருடப்பட்டது தெரியவந்தது.
அவா் அளித்த புகாரின்பேரில் பாபநாசம் காவல் துணைக் கண்காணிப்பாளா் முருகவேல் மற்றும் காவல் ஆய்வாளா் சகாய அன்பரசு மற்றும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
இந்நிலையில் அவா்கள் திருக்கருகாவூா் பகுதியில் திங்கள்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கு இடமான இளைஞரிடம் விசாரித்தனா். அதில் அவா் பாபநாசம் அருகேயுள்ள ரெங்கநாதபுரம் பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்த முத்து மகன் முகேஷ் (25) என்பதும், பாபநாசம் கைப்பேசிக் கடையில் அவா் திருடியதும் தெரியவந்தது. இதைத்தொடா்ந்து அவரிடமிருந்து திருடுபோன கைப்பேசிகள் மற்றும் உதிரி பாகங்களை போலீஸாா் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.