"மரக்கன்றுகள் நடுவது மக்கள் இயக்கமாக வேண்டும்'
மரக்கன்றுகள் நடுவது மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்றார் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன்.
மரக்கன்றுகள் நடுவது மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்றார் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன்.
திருச்சி மாநகரைப் பசுமையாக்கும் திட்டத்தின் கீழ், மாநகராட்சியின் நான்கு கோட்டங்களுக்குள்பட்ட சாலையோரங்களில் ஞாயிற்றுக்கிழமை 2,700 மரக்கன்றுகள் நடப்பட்டன.
மாநகரைப் பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணி ஜூன் 5 ஆம் தேதி தொடங்கி, குடியிருப்பு நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மூலமாக ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க முடிவாகி, அதன்படி நடப்படுகின்றன.
அதன் ஒரு பகுதியாக, ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை, கோ- அபிஷேகபுரம் கோட்டத்துக்குள்பட்ட பகுதி சாலையோரங்களிலும், வீடுகளிலும் மரக்கன்று நடும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சியின் 29 ஆவது வார்டு ரயில் நகர்ப் பகுதியில் மாநகராட்சி ஆணையர் ந. ரவிச்சந்திரன் முன்னிலையில், குடியிருப்புச் சங்க நிர்வாகிகளும், பொதுமக்களும் மரக்கன்று நட்டனர். தொடர்ந்து 150 வீடுகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் கூறியது: மாநகரைத் தூய்மையாக வைக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மக்கும், மக்காத குப்பைகளைத் தரம் பிரித்து வழங்குவது போன்ற திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகின்றன.
காய்கறி, உணவுக் கழிவுகளை வீட்டிலேயே உரமாக்கும் வகையில் குடியிருப்புதாரர்களை ஊக்குவிக்கும் வகையில், வாரத்தில் மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட உள்ளது. நமது ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிப்பது சுற்றுச்சூழல்தான். எனவே ஒவ்வொருவரும் வீட்டில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். மரக்கன்றுகள் நடும் திட்டம் பொதுமக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்றார் ஆணையர்.
உதவி ஆணையர்கள் பிரபாகரன், தயாநிதி, ஷேக் அய்யூப், துரைமுருகன் ஆகியோர் தத்தம் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கினர். ஏராளமான மக்கள் மரக்கன்று நட்டனர்.