திருச்சி பாலக்கரை பழையகோவில் புனித வியாகுல அன்னை ஆலயத்தின் 270 ஆம் ஆண்டுப் பெருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்சி பாலக்கரை எடத்தெரு பகுதியில் பழையகோயில் எனப்படும் புனித வியாகுல அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டுப் பெருவிழா 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான பெருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. காலையில் திருப்பலி நடைபெற்ற நிலையில், மாலை 6.15 மணிக்கு சேலம் மறைமாவட்ட ஆயர் எஸ். சிங்கராயன் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஆலயத்தைச் சுற்றி கொடி வலம் வருதலுக்குப் பின்னர், அதிர்வேட்டுகள் முழங்க ஆலய வளாகத்தில் கொடியேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து சனிக்கிழமை முதல் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை நேரங்களில் திருப்பலிகள் நடைபெறுகின்றன. இந்த நிகழ்வுகளில் பல்வேறு ஆலயங்களின் பங்குத்தந்தைகள் பங்கேற்று மறையுரையாற்றுகின்றனர். ஆண்டுத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி அக்டோபர் 6 ஆம் தேதி மாலை நடைபெறுகிறது. அன்று மாலை திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் பி.தாமஸ் பால்சாமி மறையுரையாற்றுகிறார். அக்டோபர் 7 ஆம் தேதி காலை 4.30 மணிக்கு தேரடித் திருப்பலி ஆலயப் பங்குத்தந்தை எஸ். ஜோசப் தலைமையில் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடியேற்றத்தில் பங்குப்பேரவை, பக்த சபை இயக்கங்கள், அன்பியங்களைச் சேர்ந்தவர்கள், பங்கு இறைமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். ஆண்டுத் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை ஆலயப் பங்குத்தந்தை எஸ். ஜோசப், எஸ். மரியசூசை உள்ளிட்டோர் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.