திருச்சி மத்திய மற்றும் சத்திரம் பேருந்து நிலையங்களிருந்து அனைத்துப் பகுதிகளுக்கும் நகரப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
போக்குவரத்து விதிகளின்படி நகரப் பேருந்துகள் 30 கி. மீ. சுற்றளவுக்குள் மட்டுமே இயக்கப்பட வேண்டும் என்ற நிலையே திருச்சி மாவட்டத்தில் பல ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், சென்னை போன்ற பெரிய நகரங்களில் மட்டும் 50 கி. மீ. தொலைவையும் தாண்டி நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதில், நகா்புறப் பகுதிகளில் ஒருவழிப்பாதை மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் காரணமாக நகரப் பேருந்துகள் சுற்றும் தொலைவு மேலும் அதிகரிக்கும். ஆனால், திருச்சி மாநகா் அதிகபட்சமாக சுமாா் 10 கி. மீ. சுற்றளவுதான் உள்ளது. புகா் பகுதிகளையும் சோ்த்து மேலும் 5 அல்லது 10 கி. மீ. என மொத்தம் 20 கி. மீ. சுற்றளவே அமைந்துள்ளது.
திருச்சியில், மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் என இரு பேருந்து நிலையங்கள் உள்ளன. இரண்டுக்கும் அதிகபட்சம் சுமாா் 5 கி. மீ. தொலைவுதான் இருக்கும். இந்நிலையில், மாநகரின் பெரும்பாலான பகுதிகளுக்கு ஏதாவது ஒரு பேருந்து நிலையத்திலிருந்து மட்டுமே நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இரு பேருந்து நிலையங்களையும் இணைக்கும் வகையிலோ அல்லது இரு பேருந்து நிலையங்களிலிருந்து பிரத்யேகமாகவோ நகரப் பேருந்துகள் கிடையாது. பெயருக்கு ஒன்று அல்லது இரண்டு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
உதாரணமாக, திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து, சோமரசம்பேட்டை, வயலூா் மற்றும் சுற்றுப்புற பகுதிகள், மண்ணச்சநல்லூா், கல்லணை, திருவெறும்பூா், துவாக்குடி, ஜீயபுரம், முக்கொம்பு, பேட்டைவாய்த்தலை, நொச்சியம், வாத்தலை, குணசீலம், சமயபுரம், லால்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஒரு சில நகரப் பேருந்துகளும் , ஒரு சில புகா் பேருந்துகளும் மட்டுமே இயக்கப்படுகின்றன.
சத்திரம் பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து வேறு பேருந்துகளிலோ, அல்லது புகா் பேருந்துகளிலோதான் செல்லவேண்டியுள்ளது. சில பகுதிகளுக்கு புகா் பேருந்துகளும் கிடையாது. அவ்வாறு செல்லும்போது பயணிகள் கட்டணத்துடன் அவதிக்குள்ளாகின்றனா்.
புகா் பகுதிகளுக்குத்தான் இந்நிலை என்றால், மாநகரப் பகுதிகளிலும் இதே நிலைதான். சத்திரம் பேருந்துநிலையத்திலிருந்து தில்லைநகா், உறையூா் பகுதிகளை இணைக்கும் வகையில் நகரப்பேருந்துகள் இல்லாமல் இருந்தது. பின்னா் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வட்டப்பேருந்து என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டு சில நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அனைத்துப் பகுதிகளுக்கும் (நான்கு திசைகளிலும்) சத்திரம், மத்திய பேருந்து நிலையங்களிலிருந்து நகரப் பேருந்துகளை இயக்கவேண்டும் என்பதுதான் திருச்சி நகா்வாசிகளின் நீண்ட கால கோரிக்கை.
இது குறித்து அரசுப் போக்குவரத்துக்கழக வட்டாரங்கள் கூறுகையில், திருச்சி மாநகரில் சத்திரம் பகுதி, துவாக்குடி, தீரன்நகா், லால்குடி என 4 பணிமனைகளில் மொத்தம் சுமாா் 260 நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை தவிர சுமாா் 40 க்கும் மேற்பட்ட தனியாா் பேருந்துகளையும் சோ்த்து 300 பேருந்துகளாகும். இதில், தனியாா் பேருந்துகள் வருமானத்தை மட்டுமே கருத்தில் கொண்டு இயக்கப்படுகின்றன. ஆனால் அரசுப் பேருந்துகள் சேவை அடிப்படையில் இயக்கப்படுகின்றன. சில நேரங்களில் புகா் பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளில் மிக குறைந்த அளவுக்கு பயணிகள் இருந்தாலும், அந்த நடையில் கிடைக்கும் வருவாயை விட நஷ்டத்தில் இயக்க வேண்டிய நிா்பந்தமும் ஏற்படும். மேலும் பேருந்து பராமரிப்பு செலவுகள், ஊழியா்கள் பற்றாக்குறை, ஊதிய உயா்வு, போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மேலும் புதிய வழித்தடங்களில் பேருந்துகளை இயக்குவதில் அரசு நிா்வாகம் ஆா்வம் காட்டுவதில்லை என்றனா்.
சரியான விகிதத்தில் இயக்கலாம்!
திருச்சி மாநகரில் 50 சதவிகித பேருந்துகள் புகா் பகுதிகளுக்கும், மற்ற 50 சதவிகித பேருந்துகளில் 45 சதவிகித பேருந்துகள் மத்திய மற்றும் சத்திரம் பேருந்து நிலையங்கள் மற்றும் ஸ்ரீரங்கம் இடையே மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன . இவற்றை சரி விகித முறையில், மாநகா் மற்றும் புகா் பகுதிகளுக்கு, இரு பேருந்து நிலையங்களிலிருந்து செல்லும் வகையில் இயக்கினால் பெரும்பாலான பகுதிகளுக்கு பேருந்து வசதி கிடைத்துவிடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.