திருச்சி

திருச்சியை குளிர்வித்த திடீர் மழை

DIN

திருச்சியில் புதன்கிழமை மாலை தொடர்ந்து பெய்த மழை சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இதேபோல் புறநகர் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வந்ததால் அம்மாநில அணைகளிலிருந்து அதிக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன்காரணமாக மேட்டூர் அணை நிரம்பியதை அடுத்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், ஈரோடு, கரூர் வழியாக திருச்சி பகுதிகளில் உள்ள முக்கொம்பு, கொள்ளிடம் பகுதியில் அதிக நீர் வரத்து காணப்படுகிறது. காவிரி ஆற்றின் இரு கரைகளிலும் வெள்ள நீர் கரைபுரண்டோடுகிறது. இதன்காரணமாக, வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு, தண்ணீரின் வரத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. 
இந்நிலையில், வெப்பசலனம், மேலடுக்கு சுழற்சி காரணமாக திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்ட பகுதிகள், கடலோரப்பகுதிகளுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செவ்வாய்க்கிழமை (செப்.10) இரவு நகரின் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்தது. இதைத்தொடர்ந்து, புதன்கிழமை நண்பகல் வரை வெயில் தகித்தது.  பின்னர்,  திடீரென மேககூட்டங்கள் திரண்டு மாலை 5.45 மணிக்கு மாநகர், புறநகர் கனமழை பெய்தத் தொடங்கியது. 
இதனால், மாநகரில் பாரதிதாசன் சாலை, சத்திரம் பேருந்து நிலையம், மலைக்கோட்டை பகுதிகள், உறையூர், மரக்கடை, பாலக்கரை,மேலப்புதூர், தென்னூர், சாஸ்திரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அதோடு, தெருக்களில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளது. அதேபோல், புறநகர் பகுதிகளான மண்ணச்சநல்லூர், லால்குடி, துவாக்குடி, திருவெறும்பூர் உள்ளிட்ட இடங்களிலும் பலத்த மழை பெய்தது. இதனால் திருச்சி மாவட்டம் முழுவதும் குளிர்ந்து காணப்படுகிறது.
மணப்பாறையில்...
மணப்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.
மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் புதன்கிழமை மாலை காற்று,  இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்தத் திடீர் மழையால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். சுமார் நான்கு மணிநேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்த மழைநீர் ஆங்காங்கே தேங்கிக் கிடந்தது. குறிப்பாக, பேருந்து நிலையத்தின் முன்புறம் உள்ள சாலையில் மழைநீர் தேங்கி கடல்போல் காட்சியளித்தது. இருப்பினும் மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

SCROLL FOR NEXT