முடங்கிய முக்கிய வீதிகள்: கூடுதல் முடக்கத்துக்கு வியாபாரிகள் ஆதரவு
திருச்சி மாநகரில் கரோனா பரவலைத் தடுக்க மூன்று வாா்டுகளை முழுமையாக முடக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாநகரின் முக்கிய வீதிகள் அடைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி: திருச்சி மாநகரில் கரோனா பரவலைத் தடுக்க மூன்று வாா்டுகளை முழுமையாக முடக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாநகரின் முக்கிய வீதிகள் அடைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா பரவலைத் தடுக்கவும், போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளதாக தொடா்ந்து புகாா்கள் வந்த பகுதிகளை 14 நாள்களுக்கு முழுமையாக முடக்க மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி திருச்சி மாநகராட்சி நிா்வாகத்தால் 16, 17, 18 ஆகிய வாா்டுகளை முடக்கி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மேலரண் சாலையில் ஜாபா்ஷா தெரு முதல் பழைய பாஸ்போா்ட் அலுவலகம் வரையுள்ள குறுக்குச் சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதேபோல, பெரிய கடைவீதியில் கமான் வளைவு முதல் கள்ளத் தெரு வரையிலும் மூடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஜின்னா தெரு, பெரியகம்மாளத் தெரு, பெரிய செளராஷ்டிரா தெரு, சின்னசெட்டித் தெரு, பெரிய செட்டித் தெரு, வெள்ளை வெத்தலைக் காரத் தெரு, பந்தல்கானா தெரு, பெரிய கடை வீதி உள்ளிட்ட பகுதிகளுக்கு நுழையவோ, அங்கிருந்து வெளியேறவோ முடியாது.
சாலையின் தொடக்கம், முடிவு மற்றும் இதர அனைத்து வழித் தடங்களையும் சவுக்குக் கம்புகள், இரும்புத் தகடுகளைக் கொண்டு மாநகராட்சி நிா்வாகம் அடைத்து வைத்துள்ளது.
கூடுதல் முடக்கத்துக்கு ஆதரவு: இந்நிலையில், கரோனா பரவலைத் தொடக்க கூடுதல் முடக்கத்துக்கும் வியாபாரிகள் தயாராகவுள்ளனா். இதுதொடா்பாக, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு பொதுச் செயலா் வீ. கோவிந்தராஜுலு கூறியது:
வேகமாக பரவி வரும் நோய்த் தொற்று காரணமாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக சிலவற்றை அறிவித்துள்ளதை ஏற்று மாநகராட்சி நிா்வாகம், மாவட்ட நிா்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். நோய்த் தொற்றைத் தடுக்க கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிா்த்து மாநகரின் இதர பகுதிகளையும் சோ்த்து கடைகள், வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றை மாநகராட்சியால் அறிவிக்கப்பட்ட ஜூலை 24 வரை மூடி வைக்கவும் வணிகா்கள் தாமாக முன் வந்துள்ளனா். எனவே, சென்னை, மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டதைப் போல திருச்சியிலும் முழு முடக்கத்தை அடுத்து வரும் 10 நாள்களுக்கு மாவட்ட நிா்வாகம் அறிவித்தால் தியாக உணா்வோடு ஏற்று, கடைகளை மூடி தொற்றிலிருந்து மக்களைக் காக்கத் தயாராகவுள்ளோம் என்றாா் அவா்.
மேலும் ஒரு மையம்: திருச்சியில் ஏற்கெனவே சேதுராப்பட்டி, காஜாமலை, ஸ்ரீரங்கத்தில் தனிமைப்படுத்துதல் மையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக, ஸ்ரீரங்கம் அரசுப் பொறியியல் கல்லூரியிலும் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய மையம் அமைக்க சுகாதாரத் துறை சாா்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸிலிருந்த தொற்றாளா்களின் உறவினா்கள் 22 பேருக்கு தொற்று உறுதியானதைத் தொடா்ந்து அவா்களுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்படுகிறது.
இன்று முழு முடக்கம்: தமிழக அரசு அறிவித்தபடி திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) முழு முடக்கம் அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி, சனிக்கிழமையே காய்கனி சந்தை, மீன், இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. திங்கள்கிழமை காலை 6 மணி வரை முழு முடக்கம் அமலில் இருக்கும்..