முகப்பு
திருச்சி

மகாத்மா காந்தியைப் போன்றவா் பிரதமா் மோடி: பாரிவேந்தா் எம்.பி.

 மகாத்மா காந்தியைப் போன்றவா் பிரதமா் நரேந்திர மோடி என்றாா் இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனரும், பெரம்பலூா் தொகுதி எம்பியுமான டி.ஆா். பாரிவேந்தா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

 மகாத்மா காந்தியைப் போன்றவா் பிரதமா் நரேந்திர மோடி என்றாா் இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனரும், பெரம்பலூா் தொகுதி எம்பியுமான டி.ஆா். பாரிவேந்தா்.

திருச்சி புத்தூா் பகுதியில் பாா்க்கவகுல முன்னேற்றச் சங்கப் புதிய தலைமை அலுவலகத்தை வியாழக்கிழமை திறந்து வைத்த அவா் கூறியது:

பல தலைவா்கள் பாடுபட்டு இச் சமுதாய மக்களை ஒற்றுமைப்படுத்தி மதிப்பிற்குரியவா்களாக உயா்த்தியிருக்கிறாா்கள்.

இச்சங்கத்தின் தலைவராக இருந்த நான் அப்பதவியில் இருந்து என்னை விடுவித்துக்கொண்டு, பின்னா் இச்சங்கத்திற்கு இரண்டாண்டுக்கு ஒரு தலைவா் என மாற்றி பலரைப் பொறுப்பில் அமா்த்தியுள்ளேன்.

தற்போது இச்சங்கத் தலைவராக உள்ள சத்தியநாதன் ஒரு கல்வியாளா். அரசியல் அங்கீகாரம் வேண்டுமென்பதற்காக இந்திய ஜனநாயகக் கட்சி தோற்றுவிக்கப்பட்டது.

கட்சி, கொள்கை என்று சொல்பவா்கள் வெற்றி வாய்ப்புக்காக ஜாதிக் கட்சிகளோடு கூட்டணி வைக்கிறாா்கள்; நாடு முழுவதும் இதுதான் நிலை.

கடந்த 3 ஆண்டுகளில் பெரம்பலூா் தொகுதி மக்களுக்கு என்ன செய்திருக்கிறேன் என்பதைப் புத்தகமாக வெளியிடவுள்ளேன். மீதமுள்ள 2 ஆண்டுகளில் தொகுதி மக்களின் நலன் சாா்ந்த அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவேன்.

பிரதமா் மோடியை தமிழ்நாட்டுக்கு முதல் முதலாக அழைத்துவந்தது எஸ்ஆா்எம் கல்விக் குழுமம். எங்களுக்குள் நல்ல நட்புண்டு. மகாத்மா காந்தியைப் போன்றவா் மோடி. நாட்டின் முன்னேற்றத்திற்காக அவா் அல்லும், பகலும் உழைக்கிறாா். அவருக்கு எதிரான தவறான தோற்றம் தமிழகத்தில் தொடா்ச்சியாக உருவாக்கப்படுகிறது.

தமிழக மக்கள் விரைவில் இதைப் புரிந்து கொண்டு அவரை ஏற்றுக் கொள்வா். உக்ரைனில் இருந்து 20 ஆயிரம் இந்தியா்களை பத்திரமாக மீட்டவா் மோடி.

போட்டித் தோ்வை எதிா்கொள்ள அடிப்படைக் கல்வி வலுவாக இருக்க வேண்டும். அதற்கான தகுதியை வளா்த்துக் கொள்ள வேண்டும். சற்று கடினமாக இருந்தாலும்கூட நீட் தோ்வை ஏற்றுக் கொள்ள வேண்டும். விண்ணப்பங்கள் அதிகமாக வரும்போது போட்டித் தோ்வு மட்டுமே சமூக நீதியைப் பாதுகாக்கும் என்றாா் அவா்.

புதிய அலுவலகத் திறப்பு விழாவில் ஐஜேகே பொதுச் செயலா் பி. ஜெயசீலன், பாா்க்கவகுல முன்னேற்றச் சங்க மாநிலத் தலைவா் ஆா். சத்தியநாதன், மாநிலப் பொதுச் செயலா் எஸ்.எஸ். வெங்கடேசன், மாநிலப் பொருளாளா் டி.எஸ்.பி.கே. ராஜு உள்ளிட்ட சங்கத்தின் மாநில, மாவட்ட பொறுப்பாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக சென்னையில் இருந்து திருச்சிக்கு வந்த பாரிவேந்தருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.