கோலம் போடுவது வேலையல்ல; அது ஒரு கலை! விதவிதமான கோலங்களுக்கு டிப்ஸ்!
கோலம் போடுவது ஒரு வேலையல்ல, அது ஒரு கலை, விதவிதமான கோலங்கள் போட டிப்ஸ்
காலையில் எழுந்ததும் பெண்கள் முதல் வேலையாக வீட்டில் தலைவாசலைப் பெருக்கி, தண்ணீர் தெளித்து கோலம் போடுவார்கள். கோலம் என்றால் சின்னதாக ஒரு கோலம் அவ்வளவுதான்.
ஆனால், ஒவ்வொரு நாளும் வீட்டின் வாசலில் போடப்படும் கோலங்கள் ஒன்றுபோலவே இல்லாமல் விதவிதமாக இருக்கலாம். ஏனென்றால் அது வேலையல்ல, ஒரு கலை.
புள்ளியில்லாமல் கோலம் போடும்போது முதலில் ஒரு புள்ளியை மையமாக வைத்து அதைச் சுற்றி கோலத்தை விரிவாக்க வேண்டும்.
இப்போதெல்லாம் இணையதளங்களில் கோலங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றை ஸ்க்ரீன் ஷாட் வைத்துக் கொண்டு நாள்தோறும் புதிதுபுதிதாகக் கோலம் போடலாம்.
ஒரு வாரத்துக்கு கோடுகள் போட்ட கோலம், ஒரு வாரத்துக்கு புள்ளி வைத்த கோலம், பூக்கோலம், கலர் கோலம் என்று நாள்தோறும் நம்மை உற்சாகத்தோடு வைத்துக் கொள்ள கோலம் உதவும்.
அபார்ட்மெண்டில் வசிப்பவர்கள் தங்களது வீட்டின் முன் செம்மண்ணால் மெழுகுவிட்டு அல்லது சிமென்ட் தரை என்றால் ஏதேனும் ஒரு அடர்த்தியான பெயிண்ட் அடித்துவிட்டு அதன் மேல் கோலமிட்டால் பளிச்சென்று தெரியும்.
கோலப்பொடி வாங்கி சலித்தவுடன் கால்படி மாவுக்கு நூறு கிராம் பச்சரிசி மாவு கலந்து கோலம் போடலாம்.
அரிசி மாவு கலந்த சலித்து கோலப்பொடியை கோலக்குழாயில் திணித்து போடும்போது குழாயின் துளைகள் அடைபடாது.
பண்டிகை நாள்களில் தலைவாசல் படியை நீர் விட்டு கழுவி கோலம் போட வேண்டும். கட்டாயம் செம்மண் கரை கட்ட வேண்டும்.
வாசல் மண் தரையானால் நன்கு பெருக்கி விட்டு தண்ணீர் தெளித்து கோலம் போட்டு செம்மண் அல்லது காவி கரையிட வேண்டும். அம்பாள், நாள்தோறும் வாசலில் கோலம் போடும் வீட்டுக்கு மனம் மகிழ்ந்து வருவாள், மகாலட்சுமி வந்து அருள் தருவாள் என்பது ஐதீகம்.
கோலப்பொடி வாங்கும்போது வெளுப்பு அதிகம் உள்ள பொடியை வாங்க வேண்டும் அல்லது வெளுப்பு குறைவாக இருந்தால் நிச்சயம் பச்சரிசி மாவை கலக்க வேண்டும்.