FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

புன்னகையின் நிராகரிப்புதான் போர்!

'கோகுல் சாண்டல் பவுடர், ரோஸ் கலர் ரிப்பன், மருதாணி காயும் விரல்கள், காற்றில் உருளும் கொத்து முடி, பித்த வெடிப்பு பாதம், ததும்பும் ஸ்பரிசங்கள்... காத்திருப்புகள்...

Updated On : 26 ஜூலை 2026, 4:14 am IST
பகிர்:

'கோகுல் சாண்டல் பவுடர், ரோஸ் கலர் ரிப்பன், மருதாணி காயும் விரல்கள், காற்றில் உருளும் கொத்து முடி, பித்த வெடிப்பு பாதம், ததும்பும் ஸ்பரிசங்கள்... காத்திருப்புகள்... வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும்... பூ ஜாடிகள் வைக்கப்பட்ட ஸ்டூடியோவில் எடுக்கப்பட்ட அப்பா - அம்மா புகைப்படம்... இன்னும் விதவிதமாக, இவ்வளவும் எழுகின்றன. யோசித்துப் பார்த்தால் 1980-கள் வரை பிறந்த எல்லோரது ஞாபகத்திலும் உள்ள வாழ்க்கை எத்தனை எத்தனை நினைவுகளைக் கிளறி விடுகின்றன.

அந்த வாழ்க்கையின் பின்னணியில் பூவாக மலர்ந்து நிற்கிற காதல், அன்பு, உறவுகளை ஓர் அதிகாரத்தின் தொனி எப்படி இடம் மாற்றிப் போட்டது என்பதுதான் இந்தப் படம்'' ஒளிவு மறைவு இல்லாமல் பேசுகிறார் இயக்குநர் ராஜா மோகன். 'குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்', 'வானவராயன் வல்லவராயன்' படங்களை இயக்கி ஈர்த்தவர். இப்போது 'அட்ரஸ்' படத்தின் மூலம் கதை சொல்ல வருகிறார்.

1980-களின் பின்னணி எப்போதும் சுவாரஸ்யம்... இதில் எந்த அளவுக்கு அது கை சேர்ந்திருக்கிறது?

Advertisement

Advertisement

1980-களின் கிராமத்து வாழ்க்கைதான் எப்போதுமே அழகு. உலகம் முழுக்க பிழைப்புக்காகப் புலம் பெயர்ந்து அலையும் ஏராளமான மனிதர்களிடம் மிச்சம் இருப்பவை கடந்து வந்த வாழ்வின் மீதான தீராத நம்பிக்கையும், அந்த மண் காத்து கொடுத்த கலாசாரங்களும்தான். ஏதோ ஒரு வேகத்தில் மண்ணை விட்டு வெளியேறிய கணங்கள் செத்துப் போகிற வரைக்கும் மறக்குமா என்ன? அதை மீட்டெடுத்து பார்வைக்கு வைக்க ஆசை. அது நூறு சதவீதம் கைக்கு வந்து சேர்ந்திருக்கிறது.

இன்னும் தன் வேர்களை இழக்காத தமிழக - கேரள வனப்பகுதி கிராமங்கள் இதைச் சாத்தியப்பட வைத்திருக்கிறது. மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு ஒரு கிராமத்துக்கு விலாசம் இல்லை. அது தமிழக கிராமமா... இல்லை கேரளத்தைச் சார்ந்த கிராமமா... என்ற குழப்பம். அந்தக் கிராமத்தின் விலாசத்துக்காக நடக்கும் போராட்டத்தின் தலைமுறை தொடர்ச்சிகள்தான் திரைக்கதை.

கிராமத்துப் படங்களில் காதலும், வன்முறையும் முதன்மைப் பொருள்களாகி விட்டனவே?

உலகத்தில் உறவுகள்தான் முதன்மையானவை. ஒவ்வொரு முறையும் இந்த உறவுகள் தரும் உணர்வுகள்தான் நம்மைப் பெரிய மனுஷனாக்கிக் கொண்டே இருக்கின்றன.

அப்பத்தா, ஐயா, பெரியம்மா, பெரியப்பா, மாமா, அத்தை என உறவுகளைக் கொண்டாடி வந்த தலைமுறை நமக்குப் பிறகு என்னவாகும்? இதனால் எவ்வளவு இழந்திருக்கிறோம். உறவுகள்தான் பலம் என வாழ்ந்து வரும் மக்களை அதிகார வர்க்கம் வம்புக்கு இழுக்கிறது. அத்தனை வருடங்களாகப் பாதுகாத்து, அரவணைத்த உறவுகளுக்கும் பாதிப்பு வருகிறது.

அந்தக் கணத்தில் வருகிற ஒரு நிமிட கோபம் எப்படிப்பட்ட மாற்றத்தையும் கொண்டு வரும். போர், வன்முறை, சண்டை எல்லாவற்றுக்கும் ஒரு நிமிட கோபம்தான் காரணம். புன்னகை நிராகரிக்கப்படுகிற இடத்தில் போர்தான் உருவாகும். அதிகார துஷ்ய பிரயோகம், எளிய மக்களின் மீது திணிக்கப்படும் போது வருகிற பிரச்னைகளை கதாபாத்திரங்கள் எப்படிக் கடக்கிறார்கள் என்பதுதான் இங்கே சுவாரஸ்யம்.

காதல் படங்களுக்கான சாய்ஸ்தான் அதர்வா... அவரைப் போராட்டக்களத்துக்குக் கொண்டு வந்திருக்கீங்களே?

ஏன் 'பராசக்தி' படத்தில் அவரின் போராட்டக் குணத்தைப் பார்க்கவில்லையா? தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர் அதர்வா. சின்ன வயதில் இருந்தே சினிமாவைக் கனவாக நினைத்து பயணிக்கும் கலைஞன். இந்தப் படத்துக்கு அப்படிப் பொருந்தி வந்திருக்கிறார். இன்னொரு முக்கிய வேடத்தில் தம்பி ராமையா. இதிலும் அப்படியொரு எதார்த்தம் அவருக்கு. ஹீரோயின் இடத்துக்கு பூஜா ஜவேரி. இன்னொரு முக்கியமான இடத்தில் தியா என்ற பெண்.

அடர்ந்த தாடி வளர்த்து, காது மறைக்கும் தலைமுடி வளர்த்தால் எந்த இளைஞனையும் 1980-களுக்குக் கடத்தி விடலாம். ஆனால், ஹீரோயின் அப்படியில்லை. 1980-களின் எந்த அடையாளமும் இப்போது பெண்களிடம் இல்லை. நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நாகரிகம், இப்போது உள்ள பெண்களை வேறு எங்கோ வைத்திருக்கிறது. அதெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதே ஒரு ஹீரோயினுக்கு பெரும் சவால். அந்த இடத்தில் பூஜா ஜவேரி.

இந்தக் கதையைச் சொன்ன நாளிலிருந்து இந்தப் படத்துக்காகத் தயாராகிக்கொண்டிருந்தார். உடல் எடை கூடி, தேகம் கறுத்து ஒவ்வொரு விஷயத்திலும் அத்தனை அக்கறை. 1980-களில் காதலித்தவர்கள், தங்கள் காதலியை பூஜா ஜவேரியின் சாயலில் பார்க்கலாம். மறைந்து போன தமிழ் வரிகளை மீட்டுக் கொடுத்திருக்கிறார்கள் சினேகனும், மோகன்ராஜாவும். 'ஒளியும் ஒலியும்' கேட்க ஊரே திருவிழா போல் ஆயத்தமாகும் காலம் இருந்ததே... அந்த வெள்ளிக்கிழமை பாடல்கள் போல் இருக்கும் இந்தப் பாடல்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments