அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! 20 முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு!!
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதைப் பற்றி...
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 25) வெளியிட்டுள்ளார். இந்தப் பட்டியலில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட 23 பேர் இடம்பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் பேரவைத் தேர்தலுக்கு தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலுக்கான வேலைகளை ஆளும் திமுகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும், புதுவரவான தவெகவும் தீவிரப்படுத்தி வருகின்றன.
மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் தேர்தல் களத்தில் பணியைத் தீவிரப்படுத்தியுள்ள அதிமுக தரப்பில் இதுவரை கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் கிட்டத்தட்ட நிறைவு பெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 27 தொகுதிகளில், பாமக 18 தொகுதிகளில், அமமுக 11 தொகுதிகளில், தமாகா 5 தொகுதிகளில், ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஒரு தொகுதிகளில் போட்டியிடவுள்ளன.
Advertisement
Advertisement
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் ஏற்கெனவே மூன்று கட்டங்களாக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டன. அதைத் தொடர்ந்து நேற்று அதிமுகவின் 297 வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில், ஒவ்வொரு குடும்பத்துக்கும் சிறப்பு உதவித் தொகை ரூ.10,000, மகளிருக்கு மாத உதவித் தொகை ரூ.2,000 வழங்கப்படும், ஆண்களுக்கும் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.
இந்த நிலையில், இன்று மயிலாப்பூரில் இருந்து அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தனது பிரசாரத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளார்.
அதற்கு முன்னதாக, முன்னாள் அமைச்சர்கள் 20 பேர் உள்பட மொத்தம் 23 பேர் கொண்ட அதிமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று (மார்ச் 25) காலை வெளியிடப்பட்டது.
இந்தப் பட்டியலில், எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி, வேப்பனஹள்ளி - கே.பி.முனுசாமி, திண்டுக்கல் - திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் - நத்தம் விஸ்வநாதன், தொண்டாமுத்தூர் - எஸ்பி.வேலுமணி, குமாரபாளையம் -பி.தங்கமணி, ராயபுரம் - டி.ஜெயக்குமார், மைலம் - சி.வி.சண்முகம், மதுரை மேற்கு - செல்லூர் கே.ராஜு, பாலக்கோடு - கே.பி.அன்பழகன், அரியலூர் - தாமரை எஸ்.ராஜேந்திரன், திருப்பரங்குன்றம் வி.வி.ராஜன் செல்லப்பா, நன்னிலம்- ஆர். காமராஜ், வேதாரண்யம்- ஓ.எஸ். மணியன், விராலிமலை- சி.விஜயபாஸ்கர், கோவில்பட்டி- கடம்பூர் ராஜூ, திருமங்கலம்- ஆர்.பி. உதயகுமார், சிவகாசி- ராஜேந்திர பாலாஜி, மதுரவாயல்- பெஞ்சமின், கலசப்பாக்கம்- அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பவானி- கே.சி. கருப்பணன், ஜோலார்பேட்டை- கே.சி. வீரமணி, கரூர்- எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இந்த முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் உள்ள 23 பேரில் 16 பேர் தற்போது எம்.எல்.ஏவாகவுள்ளனர். மாநிலங்களவை எம்பியாகவுள்ள சி.வி. சண்முகம் மயிலம் தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார்.
AIADMK General Secretary Edappadi Palaniswami today (March 25) released the party's first list of candidates for the Assembly elections. This list features 23 candidates, including Palaniswami.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.