தவெக தூய சக்தியா? திருட்டு சக்தியா? இபிஎஸ் கடும் விமர்சனம்
தாராபுரத்தில் முதல்வர் விஜய்யை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தது குறித்து...
அதிமுக எம்எல்ஏ-க்களை திருடுவதாகக் கூறி, தவெகவை திருட்டு சக்தி என எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பானுமதியை ஆதரித்து தளவாய்பட்டினம் பகுதியில் நடைபெற்ற பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, "ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல. அவருக்காக சுமார் 7,000 பேர் தேர்தல் பணியாற்ற வேண்டும். அவ்வாறு 7,000 பேர் இரவு - பகல் பாராமல் பணியாற்றி வெற்றிபெறச் செய்தால், குதிரை பேரத்தின் வாயிலாக விலைபோய் விட்டார். குதிரை பேரத்தில் விலை போனதற்கு தக்க தண்டனை அளிக்கப்பட வேண்டும்.
அவர் வெற்றி பெற்று வந்தால், இந்தத் தொகுதிக்கு நிறைய திட்டங்கள் கிடைக்கும் என (முதல்வர்) கூறுகிறார். அவர் ஏற்கெனவே வெற்றிபெற்றுத்தானே வந்தார். அவர் வெற்றிபெற்ற பிறகுதானே ராஜிநாமா செய்ய வைத்திருக்கிறீர்கள்.
Advertisement
Advertisement
ஒரு முதல்வர் என்றால் 234 தொகுதிகளுக்கும் பொதுவானவர். தேர்தலுக்கு முன்னர் வரையில் வெவ்வேறு கருத்துகளும் எண்ணங்களும் இருக்கலாம். தேர்தல் முடிந்த பிறகு முதல்வர் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர். அந்த எண்ணத்தில் அவர் செயல்பட்டாரா? இல்லை.
அவர் ஆட்சியைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவரை ராஜிநாமா செய்ய வைத்து, அவர்களின் கட்சியில் இணைத்தது நியாயமா? இதுதான் தூய சக்தியா? இது திருட்டு சக்தி. நம் எம்எல்ஏ-வை திருடி விட்டார்கள்.
பிரசார மேடையில் அந்த அம்மா (தவெக வேட்பாளர் சத்யபாமா) அழுகிறார்கள். என்னவொரு நடிப்பு. விஜய்யே தோற்றுவிட்டார். நீங்கள் வெற்றி பெறுவதற்கு எத்தனை பேர் உழைத்தனர். அவர்களின் மனம் எப்படி பாடுபடும்? ஆனால், நீங்கள் மேடையேறி அதிமுகவையே விமர்சிக்கிறீர்கள். அதிமுக இருப்பதால்தான் நீங்கள் இங்கு இருக்கிறீர்கள்; உங்களுக்கு வாய்ப்பும் கிடைத்துள்ளது. முன்னரே தேர்தலில் உங்களை நிறுத்தாமல் வேறொருவரை நாங்கள் போட்டியிட வைத்திருந்தால், இடைத்தேர்தல் என்ற ஒன்றே வந்திருக்காது.
இந்தக் கட்சியைத் (தவெக) தொடங்கியே 3 ஆண்டுகள்தான் ஆகிறது. அவர்கள் 'அதிமுக மற்றும்' என்று சொல்கிறார்கள். அந்த மற்றும் என்று சொல்லியவர்தான் (விஜய்) என் வீட்டுக்கு வந்து 3 மணிநேரம் காத்துக் கொண்டிருந்தார். அவருடைய படம் வெளியாவதற்கு அனுமதிகோரி 3 மணிநேரமாக என் வீட்டில் காத்துக் கொண்டிருந்தார். அந்த நன்றியுணர்வு இருக்கிறதா?" என்று தெரிவித்தார்.
TVK has poached an AIADMK MLAs, says Edappadi Palaniswami
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.