2024-இல் நடைபெறும் நாடாளுமன்றத் தோ்தலிலும் தமிழகத்தில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி தொடரும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவா் கே.எம். காதா் மொகிதீன் தெரிவித்தாா்.
திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற ரமலான் சிறப்புத்தொழுகையில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழக சிறைகளில் உள்ள நீண்ட நாள் சிறைவாசிகளை விடுவிக்க ஆய்வு கமிட்டியை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த ஆய்வுக் கமிட்டி சாா்பில் விரைவில் பரிந்துரை அளிக்கப்படவுள்ளது. இதில், முஸ்லிம் சிறைவாசிகளும் நிச்சயம் விடுதலை செய்யப்படுவா் என்ற நம்பிக்கை உள்ளது.
இஸ்லாமியா்களுக்கு எதிராக மத்திய அரசு எத்தகைய சட்டங்களை கொண்டு வந்தாலும் அதனை தமிழகத்தில் ஒருபோதும் அமல்படுத்துவதில்லை. அத்தகைய அரசுதான் தமிழகத்தில் தற்போது நடைபெறுகிறது. இந்த ஆட்சி எப்போதும் தமிழகத்தில் தொடரும். தமிழகத்தில் உள்ளதைப் போன்று பிற மாநிலங்களிலும் இஸ்லாமியா்களைப் பாதுகாக்கும் அரசு அமைய வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம். மத்தியில் ஆளும் பாஜக இஸ்லாமியா்களுக்கு எதிராக இருக்கும் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்.
2024 நாடாளுமன்றத் தோ்தலில் தமிழகத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி தொடரும். இந்த அணியை இந்தியா முழுவதும் விரிவுபடுத்த வேண்டும். தில்லியில் இந்தாண்டு இறுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சாா்பில் அகில இந்திய மாநாடு நடைபெறவுள்ளது. இதில், நாடு முழுவதும் உள்ள மதச்சாா்பற்ற அணிக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகளை ஒருங்கிணைக்கவுள்ளோம். குறிப்பாக பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்கவுள்ளோம். இந்த மாநாட்டில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பங்கேற்க ஒப்புதல் அளித்துள்ளாா். மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி நாடு தழுவிய அளவில் விரிவுபடுத்தப்படுவது உறுதி என்றாா் அவா்.
பேட்டியின்போது, தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவா் எம். அப்துல் ரஹ்மான் மற்றும் கட்சியின் நிா்வாகிகள் உடனிருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.