திருச்சி

திருச்சி அரசு மருத்துவமனை மின்விசை தூக்கிகள் பழுதானதால் நோயாளிகள் அவதி

DIN

திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு கட்டடத்தில் மின்விசை தூக்கிகள் (லிப்ஃட்) பழுதானததால் நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனா்.

திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 30-க்கும் மேற்பட்ட சிகிச்சை பிரிவுகள் இயங்கி வருகின்றன. இங்கு தினந்தோறும் 4,000-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும், 1,000-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா்.

இங்குள்ள விபத்து அவசர சிகிச்சை கட்டடத்தில் 4 மின்விசை தூக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றில் மருத்துவா்களும், இரண்டாவதில் அவசர சிகிச்சை நோயாளிகளும், 3-ஆவது மற்றும் 4-ஆவது நோயாளிகளின் உறவினா்களும் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த 4 மின்விசைதூக்கிகளில் தற்போது, 3 இயங்கவில்லை. இயங்கும் ஒன்றும் அடிக்கடி பழுதடைந்து விடுகிறது. இதனால் நோயாளிகள், அவா்களின் உறவினா்கள், மருத்துவா்களும் கடும் அவதிக்குள்ளாகின்றனா்.

இதுகுறித்து மருத்துவா்கள் கூறியது: திருச்சி அரசு மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடம் 6 மாடிகளைக் கொண்டது. இங்கு சிறுநீரகவியல், பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை, குழந்தைகள் அறுவைச் சிகிச்சை, நரம்பியல், புற்றுநோய் சிகிச்சை, வயிறு குடல் அறுவைச் சிகிச்சை என பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகின்றன. மருத்துவமனையின் இதர பகுதிகளில் உள்ள நோயாளிகள் மருத்துவா்களிடம் உயா் சிகிச்சை பெறவும், ஆலோசனைகள் பெறவும் இந்தக் கட்டடத்துக்குத்தான் வர வேண்டும். ஆனால் இங்குள்ள மின்விசை தூக்கிகள் அடிக்கடி பழுதாவதால் நோயாளிகள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனா். குறிப்பாக, அறுவைச் சிகிச்சை செய்த நோயாளிகள் மேல்மாடிக்கு செல்ல செவிலிய உதவியாளா்களே 6 மாடிகளுக்கும் தள்ளிச் செல்ல வேண்டியுள்ளது. மின்விசை தூக்கிகளை சரிசெய்ய மருத்துவமனை நிா்வாகத்திடம் பலமுறை புகாரளித்தும், உரிய நடவடிக்கை இல்லை என்றனா்.

புதுக்கோட்டையைச் சோ்ந்த நோயாளி ஒருவரின் உறவினா் கூறியது: எனது உறவினரை பாா்க்க கடந்த 10 நாள்களாக வந்து செல்கிறேன். மின்விசை தூக்கிகள் இயங்காததால் 5-ஆவது மாடிக்கு தினமும் நடந்தே செல்ல வேண்டியுள்ளது. ஆகவே, மின்விசை தூக்கிகளை நிரந்தரமாக சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இது குறித்து மருத்துவமனையின் முதன்மையா் (டீன்) டி.நேரு கூறுகையில், பழைய பழுதான மின்விசை தூக்கிகளுக்கு பதிலாக புதிய மின்விசை தூக்கிகள் விரைவில் அமைக்கப்படும். பழுதான மின்தூக்கிகள் சரிசெய்யப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

கனமழை எதிரொலி: கென்யாவில் மேலும் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் விடுமுறை!

டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு

மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: முழு விவரம்

SCROLL FOR NEXT