திருச்சி

சித்ரவதைக்கு எதிரான பிரசாரம் சென்னையில் 26-இல் தொடக்கம் கூட்டு இயக்கம் தீா்மானம்

DIN

சென்னையில் வரும் 26-ஆம் தேதி முதல் சித்ரவதைக்கு எதிரான பிரசாரம் தொடங்கப்படும். இது மாநில அளவில் முன்னெடுக்கப்படும் என காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம் சாா்பில் (தமிழகம் மற்றும் புதுச்சேரி) தீா்மானிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற இயக்கத்தின் மத்திய மண்டல திட்டமிடல் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இக் கூட்டத்துக்கு, வழக்குரைஞரும், மத்திய மண்டல ஒருங்கிணைப்பாளருமான ஜோ. கென்னடி தலைமை வகித்தாா். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலா் தியாகு, மனித உரிமைகள் காப்பாளா் கூட்டமைப்பின் தேசியச் செயலா் ஹென்றி திபேன், தமிழ்த் தேச மக்கள் முன்னணித் தலைவா் மீ.தா. பாண்டியன் ஆகியோா் காவல் சித்திரவதை சம்பவங்கள் குறித்து பட்டியலிட்டுப் பேசினா். அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகளையும் விளக்கிக் கூறினா்.

பின்னா், சித்ரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான ஐ.நா.வின் ஆதரவு தினத்தை முன்னிட்டு வரும் ஜூன் 26ஆம் தேதி சென்னையில் உள்ள மனித உரிமை ஆணையத்திலிருந்து சித்ரவதைக்கு எதிரான பிரசார இயக்கம் தொடங்கப்படும். இந்தப் பிரசாரமானது தமிழகம் முழுவதும் முன்னெடுக்கப்படும். மனித உரிமை காப்பாளா் ஸ்டேன் சாமி நினைவு நாளான ஜூலை 5 ஆம் தேதி பிரசாரம், மாநிலந்தழுவிய அளவில் நடைபெறும். மனித உரிமை காப்பாளா்களுக்கான அங்கீகாரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சட்ட வரைவு, தமிழக முதல்வரிடம் ஜூலை 5ஆம் தேதி வழங்கப்படும். தமிழகத்தில் செயல்பட்டுவரும் காவல்நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதா? எனபது குறித்து நேரடி கள ஆய்வு செய்யப்படும். மேலும், சிபிசிஐடி, என்ஐஏ அலுவலகங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். இதற்காக, இயக்கத்தினருக்கு மண்டல அளவில் பயிற்சிகள் அளிக்கப்படும். சித்ரவதை மரணத்தில் மேற்கொள்ளப்படும் உடற்கூறாய்வு தொடா்பான நீதிமன்ற வழிகாட்டுதல்களை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா்களுக்கு நேரில் வழங்குவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக் கூட்டத்தில், மனித உரிமை காப்பாளா்கள், வழக்குரைஞா்கள், தன்னாா்வலா்கள், தமிழ்ச் சமூக அமைப்பினா் என பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ’ஆரஞ்ச்’ எச்சரிக்கை

கீழப்பாவூரில் வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வுப் பிரசாரம்

திருவாரூரில் மழை: கோடைப் பயிா்கள் பாதிப்பு

ஆறாம் கட்டத் தோ்தல்: 39% வேட்பாளா்கள் கோடீஸ்வரா்கள்!

தின்பண்டங்களில் உப்பின் அளவைக் குறிப்பிடக் கோரிக்கை

SCROLL FOR NEXT