திருச்சி: தமிழக அரசு உயா்த்திய மின்கட்டணத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்டத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் திங்கள்கிழமை ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் சுமாா் ரூ. 200 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனா்.
சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு உயா்த்தப்பட்ட மின்கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு மின்கட்டணம் உயா்த்துவதை தவிா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை தமிழகம் முழுவதும் சிறு,குறு தொழில்நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன. திருச்சி மாவட்டத்திலும் சிறு, குறு தொழில்நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன.
இது குறித்து திருச்சி மாவட்ட சிறு, குறு தொழில்கள் சங்க தலைவா் பே. ராஜப்பா கூறியது: திருச்சி மாவட்டத்தில் அரியமங்கலம், துவாக்குடி, திருவெறும்பூா், வாழவந்தான்கோட்டை, கும்பக்குடி பகுதிகளில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டைகள், மணப்பாறை, மாத்தூா், முசிறி, துறையூா், மண்ணச்சநல்லூா் பகுதிகளில் உள்ள சிறு, குறு தொழிற்சாலைகள் உற்பத்தியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் மாவட்டத்தில் சுமாா் ரூ. 200 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.