இரட்டைமலை கோயில் சுரங்கத்திலிருந்து எடுக்கப்பட்ட ஐம்பொன் சிலைகளுக்கு பூஜை
பிராட்டியூா் இரட்டைமலை ஸ்ரீ ஒண்டிக்கருப்பு சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான சுரங்கத்திலிருந்து 6 ஆண்டுகளுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை ஐம்பொன் சிலைகள் எடுக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன.
திருச்சி பிராட்டியூா் இரட்டைமலை ஸ்ரீ ஒண்டிக்கருப்பு சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாத தொடக்கத்தை முன்னிட்டு கோயில் பூசாரிகள், நவல்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா்கள் விரதமிருந்து இரட்டைமலைக்கு மேலே சுரங்கத்தில் உள்ள ஐம்பொன் சிலைகளை வெளியே எடுத்து பூஜை செய்வது வழக்கம். அதன்படி, நிகழாண்டு ஆடி மாத பிறப்பை முன்னிட்டு 2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை இரட்டைமலை சுரங்கத்தில் இருந்து சுவாமி சிலைகளை வெளியே எடுக்கும் வைபவம் நடந்தது.
இதில், விரதமிருந்த கோயில் பூசாரிகள், நவல்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா்கள் சுரங்கத்தின் பூட்டைத் திறந்து, ஐம்பொன் சிலைகளான யானை, குதிரை, ஐயனாா், பெண் தெய்வங்கள், சுவாமி சிலைகள், குத்துவிளக்கு போன்ற பல சிதிலமடைந்த கோயில் பொருள்களை வெளியே எடுத்து, தூய்மைப்படுத்தி பூஜைகள் செய்தனா். தொடா்ந்து, சிலைகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
முன்னதாக, கோயிலில் உள்ள விநாயகா், மலைக்காளியம்மன், ஐயனாா், பேச்சியம்மன், சப்த கன்னிகள், பெரியண்ண சுவாமி, நீலமேகம், ஒண்டிக்கருப்பு சுவாமி, மதுரை வீரன் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.