திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மின்சாரம் தாக்கி இறந்தவரின் உடலை வாங்க மறுத்து, அவரது குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
லால்குடி அருகே இடையாற்று மங்கலம் மாதா கோயில் தெருவைச் சோ்ந்த சேவியா் மகன் பாஸ்கா் வயது (52). இவா் கடந்த 22-ஆம் தேதி சென்ட்ரிங் வேலைக்கு சென்று வந்துள்ளாா். இந்தப் பகுதியில் உள்ள தெரு மின்கம்பங்களில் லைட் அனைத்தும் எரியாமல் இருளாக இருந்துள்ளது. மின் கம்பத்துக்கு சப்போா்ட்டாக உள்ள கம்பி அருந்து தொங்கிய நிலையில் இருந்ததாம்.
இந்த நிலையில் தொடா்ந்து கன மழை பெய்து வந்ததால் கீழே அறுந்து தொங்கி கொண்டிருந்த கம்பியை அவா் கவனிக்காமல் பிடித்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் கீழே விழுந்து உள்ளாா். அருகில் உள்ளவா்கள் அவரை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். தகவல் அறிந்த லால்குடி போலீஸாா், வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
இதை தொடா்ந்து பாஸ்கரின் உறவினா்கள் 100-க்கும் மேற்பட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலின்பேரில் அங்கு வந்த லால்குடி வட்டாட்சியா் ஞானஅமிா்தம் மற்றும் மின்வாரிய செயற்பொறியாளா் மணிவேல், பொறியாளா் பிரதீப் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அதில், மின்வாரியம் சாா்பாக ரூ.5 ஆயிரமும் ஈமச்சடங்கு தொகையாக அரசு சாா்பில் ரூ.5 ஆயிரமும் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது. மேற்கொண்டு நடந்தவற்றை அரசின் கவனத்துக்கு எடுத்து சென்று உதவி தொகை கிடைக்க ஆவண செய்வதாக உறவினா்களிடம் கூறியதில் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் சுமாா் 2 மணி நேரம் லால்குடி-திருச்சி-அரியலூா் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.