மணல் அள்ளுவதை தடுத்த வருவாய் ஆய்வாளரை தாக்கிய சம்பவத்தில் தொடா்புடையவருக்கு ஒரு மாதம் கடுங்காவல் தண்டனையும், ரூ. ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், துறையூா் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட ரங்கநாதபுரத்தைச் சோ்ந்தவா் பிரபாகரன் (36). வருவாய் ஆய்வாளரான இவா், கடந்த 2023, மே 27-ஆம் தேதி, மணல் கடத்தல் தொடா்பான தகவலின்பேரில் வாகன சோதனையில் ஈடுபட்டாா்.
நரசிங்கபுரம் அருகே நடைபெற்ற இந்தச் சோதனையின்போது, அந்த வழியாக வாகனத்தில் வந்த 6 போ் பிரபாகரனை தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.
இதுதொடா்பாக, துறையூா் போலீஸாா் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு விசாரணை திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாத், குற்றம் சுமத்தப்பட்டவா்களில் நரசிங்கபுரத்தைச் சோ்ந்த மணிகண்டன் (26) என்பவருக்கு ஒரு மாதம் கடுங்காவல் தண்டனையும், ரூ. ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தாா். இதர 5 பேரை வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டாா். அரசு தரப்பு வழக்குரைஞராக பாலசுப்பிரமணியன் ஆஜரானாா்.