வேலூர்

இயற்கை வளமிக்க வத்தல் மலை சுற்றுலாத் தலமாக மாறுமா?

ஆர்.சரவணன்

 தருமபுரி, செப். 29: கடல் மட்டத்திலிருந்து 3,800 அடி உயரம், ஊட்டியைப் போல் குளிர்ந்த சீதோஷ்ண நிலை, பச்சை கம்பளம் விரித்த இயற்கை வனப் பகுதிகள்... என பல்வேறு சிறப்புகள் உடைய வத்தல் மலையை சுற்றுலாத் தலமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைக் கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் இருந்து 16 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள வத்தல் மலைக் கிராமத்தில் பெரியூர், பால்சிலம்பு, சின்னாங்காடு, குளியனூர் உள்ளிட்ட 15 கிராமங்கள் உள்ளன. இங்கு 7 ஆயிரம் பழங்குடி இன மக்கள் வசித்துவருகின்றனர்.

 காபி, மிளகு உள்ளிட்ட தோட்டக் கலை பயிர்கள் வளரக் கூடிய குளிர்பிரதேசமாக இம்மலைப் பகுதி அமைந்துள்ளது.

 இம்மாவட்டத்தில் ஒகேனக்கல் மட்டுமே முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ளது. 4 பக்கமும் மலையால் சூழ்ந்துள்ள வத்தல் மலை அதிக உயரம் கொண்டது. எப்போதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை உள்ளது. இம்மலையை சுற்றுலா தலமாக உருவாக்க வேண்டும் என்று மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 சாலை, மருத்துவம், குடிநீர், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் மலைக் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

 மலையின் அடிவாரம் முதல் பெரியூர் வரையில் சாலை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தும், பணிகள் விரைவாக நடைபெறவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 இதுகுறித்து தருமபுரி எம்எல்ஏ வேலுச்சாமி கூறியது:

 வத்தல் மலை சீரமைக்கப்பட்டால், சிறந்த சுற்றுலாத் தலமாக மாறும். இப்பகுதியில் சாலை வசதி சரிவர இல்லாததால், கர்ப்பிணிகளை மலையில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக தொட்டில் கட்டி எடுத்துவரும் நிலை நடந்துவருகிறது.

 சாலை மற்றும் பஸ் வசதிகள் இல்லாததால், மேல்நிலை மற்றும் உயர் கல்வி பெறவும் மாணவர்களால் முடிவதில்லை என்றார்.

 இதுகுறித்து வழக்குரைஞர் பி.பழனிச்சாமி கூறியது:

 இப்பகுதி மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அரசு தவறிவருகிறது. இம்மலையை சுற்றுலா தலமாக மாற்றக் கோரி, மாவட்ட நிர்வாகம் கருத்துரு அனுப்பியும் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 வனத் துறையினரின் காலதாமதம், ஊரக வளர்ச்சித் துறையினரின் திட்ட மதிப்பீடுக்கான நிதி ஒதுக்காதது உள்ளிட்ட காரணங்கள் இப்பகுதியின் அடிப்படை வசதிகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்தது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பாஜக போராட்டம்

பாஜக வேட்பாளர் தோல்வி: தொண்டர்கள் 4 பேர் தற்கொலை!

விருதுநகர் முதல் தூத்துக்குடி வரை...

இராஜ ராஜ சோழன்

1919-ல் இது நடந்தது: ஸாதத் ஹஸ்ஸன் மாண்ட்டோ சிறுகதைகள்

SCROLL FOR NEXT