மருத்துவர்கள் மீதான நடவடிக்கையில் அரசு மெத்தனம்?
வேலூர், ஏப். 7: வேலூரில் பணி நேரத்தில் ஊர் திரும்பிய மருத்துவர்கள் மீதான நடவடிக்கையை மேற்கொள்வதில் அரசு மெத்தனமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. திங்கள்கிழமை நடைபெற்ற சம்பவம் குறித்து மருத்துவக் கல்வி
வேலூர், ஏப். 7: வேலூரில் பணி நேரத்தில் ஊர் திரும்பிய மருத்துவர்கள் மீதான நடவடிக்கையை மேற்கொள்வதில் அரசு மெத்தனமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
திங்கள்கிழமை நடைபெற்ற சம்பவம் குறித்து மருத்துவக் கல்வி இயக்குநர் நேரில் ஆய்வு செய்து, இதை உண்மை என்று அறிவித்த நிலையில், மருத்துவர்களின் மீதான நடவடிக்கையை அரசு தாமதப்படுத்துவது ஏன் என்றும் கேள்வி எழுப்புகின்றனர் சிறை பிடிப்பு போராட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் பல்வேறு துறைகளுக்குப் பேராசிரியர்களாக நியமிக்கப்படும் மருத்துவர்கள், மருத்துவமனைகள் செயல்படும் பகுதியிலேயே தங்கிப் பணியாற்ற வேண்டும் என்பது விதி. இதற்காக, இவர்களுக்கு குடியிருப்புகளும் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
Advertisement
பதவி உயர்வு மூலம் மருத்துவர்கள் பேராசிரியராக நியமிக்கப்படும்போது, சென்னையில் குறிப்பிட்ட துறையில் காலியிடம் இல்லாவிட்டால், அவர்கள் விரும்பும் வேறு இடத்துக்கு கவுன்சலிங் மூலம் அனுப்பப்படுகின்றனர். அவ்வாறு செல்வோர் ஓராண்டுக்கு இடமாறுதல் கோரக்கூடாது; உள்ளூரிலேயே தங்கி பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டே, பதவி உயர்வில் அனுப்பப்படுகின்றனர்.
இந்த பேராசிரியர்களின் பணி நேரம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை என்றாலும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்படும் நேரத்தில் அத்துறைத் தலைவரின் பணியைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலேயே, இவ்வாறு உள்ளூரிலேயே தங்க வேண்டும் என்ற விதி அமல்படுத்தப்பட்டது.
ஆனால், அவ்வாறு மருத்துவமனைக் குடியிருப்புகளைப் பெறும் மருத்துவர்கள் அங்கு தங்குவதில்லை என்ற புகார் ஏற்கெனவே எழுந்தது. காலை 8.45 மணிக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் துறைத் தலைவர்கள், மாலை 2 மணிக்குப் பணி முடிந்ததும் சொந்த ஊருக்குத் திரும்புகின்றனர். இந்த விதி மீறல் பெரும்பாலான மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அரங்கேறுகிறது. குறிப்பாக, சென்னைக்கு மிக அருகில் உள்ள செங்கல்பட்டு, வேலூர்,திருநெல்வேலி மற்றும் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இந்த நடைமுறை காணப்படுகிறது.
வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் துணைத் தலைவர்கள் 29 பேரில் 28 பேர் வெளியூரைச் சேர்ந்தவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் இடமாறுதலின்போது, உள்ளூர் முகவரியை அளித்துத்தான், வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் சேர்ந்துள்ளனர்.
இவர்களில் 12 பேராசிரியர்கள், 13 உதவி பேராசிரியர்களுக்கு அரசு மருத்துவமனை குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆனால், அவர்கள் இவற்றில் தங்குவதில்லை.
இவ்வாறு பணி நேரத்தில் ஊர் திரும்பும் மருத்துவர்கள் பற்றி, அரசுக்குப் புகார் அளித்தாலும், அரசியல் செல்வாக்கால், உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது.
வேலூரில் திங்கள்கிழமை பிடிபட்ட மருத்துவர்கள் மூவர் பற்றி, மருத்துவக் கல்வி இயக்குநர் நேரில் விசாரணை நடத்தினார். "பணி நேரத்தில் மருத்துவமனையில் இல்லாமல், வெளியூருக்குப் புறப்படும் நோக்கில் ரயில் நிலையத்தில் நின்றிருந்தபோது பொதுமக்களால் சிறை பிடிக்கப்பட்டது உறுதியானது' என்று அறிவித்த பிறகு, இதுவரை எவ்வித நடவடிக்கையுமே எடுக்கப்படவில்லையே ஏன்? எனக் கேள்வி எழுப்புகின்றனர் சிறை பிடிப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள்.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் ஜெ.ரவிசங்கர் தினமணி செய்தியாளரிடம் கூறியது:
புதிதாகப் பொறுப்பேற்ற ஒரு மாதத்தில் எந்த புகாரும் வரவில்லை. தற்போது பொதுமக்களிடம் பிடிபட்ட 3 பேராசிரியர்கள் பற்றிய விரிவான அறிக்கை 10 நாள்களுக்குள் அரசுக்கு அளிக்கப்படும் என்றார்.