கடை கட்டினர்; கொள்வாரில்லை!
வேலூர், ஆக. 11: வேலூரை அடுத்துள்ள செம்பராயநல்லூர் சமத்துவபுரத்தில் கட்டப்பட்ட வணிக வளாகம் பயன்பாடின்றி வீணாகக் கிடக்கிறது. வேலூர் மாவட்டத்தில் 7 சமத்துவபுரங்கள் செயல்படுகின்றன. இதில், காட்பாடி அடுத்த
வேலூர், ஆக. 11: வேலூரை அடுத்துள்ள செம்பராயநல்லூர் சமத்துவபுரத்தில் கட்டப்பட்ட வணிக வளாகம் பயன்பாடின்றி வீணாகக் கிடக்கிறது.
வேலூர் மாவட்டத்தில் 7 சமத்துவபுரங்கள் செயல்படுகின்றன. இதில், காட்பாடி அடுத்துள்ள சர்க்கரை ஆலை அருகே செம்பராயநல்லூர் சமத்துவபுரம் கடந்த 2001-ம் ஆண்டு திறக்கப்பட்டது. மொத்தம் 100 வீடுகள் கொண்ட இந்த சமத்துவபுரத்தில், ரேஷன் கடை, சாலை வசதி, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆகியவை ஊரக வளர்ச்சித்துறை சார்பில் அமைக்கப்பட்டன.
இங்கு, சுமார் ரூ.3 லட்சம் செலவில் 5 கடைகள் கொண்ட வணிக வளாகமும் கட்டப்பட்டிருக்கிறது. செம்பராயநல்லூர் ஊராட்சி சார்பில் இது கட்டப்பட்டதாகத் தெரிகிறது.
Advertisement
தொடக்கத்தில், இங்கு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் செயல்பட்டது. சில மாதங்களிலேயே வேறு இடத்துக்கு இதை மாற்றிவிட்டனர். மேலும், இங்குள்ள வணிக வளாகக் கட்டடத்தில் பகுதி நேர ரேஷன் கடை செயல்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், ரேஷன் பொருள்களுக்காக பொதுமக்கள் சமத்துவபுரத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள செம்பராயநல்லூர் கிராமத்துக்கு செல்ல வேண்டியிருக்கிறது.
தற்போது 5 கடைகள் கொண்ட வணிக வளாகத்தின், நடுவில் உள்ள கடையில் மட்டும் சில நூறு புத்தகங்களைக் கொண்ட பகுதி நேர நூலகம் வைக்கப்பட்டிருக்கிறது. நூலக ஆணைக்குழு சார்பில் அமைக்கப்பட்ட இந்நூலகம், ஒரு சில மாதங்கள் மட்டுமே தொடர்ந்து இயங்கியதாகக் கூறப்படுகிறது. தற்போது இந்த நூலகமும் பயன்பாடின்றி பூட்டிக் கிடக்கிறது. புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ள அறை முழுவதும், சுத்தம் செய்யப்படாமல் குப்பையோடு காணப்படுகிறது.
காலியாகக் கிடக்கும் மற்ற 4 அறைகளைப் பயன்படுத்தியதற்கான அறிகுறிகளே காணப்படவில்லை. விளக்கு, மின்விசிறி என எந்த இணைப்பும், மின்சாதன பொருள்களும் இல்லை. இதில் ஒரு அறை மட்டும் திறந்து கிடக்கிறது, சமூக விரோத செயல்கள் நடந்துவருவதற்கான சான்றுகளுடன்!
இக்கடைகளை வர்த்தக நோக்கில் வாடகைக்கு விடுவதிலும் சிக்கல் நீடிக்கிறது. இந்த சமத்துவபுரம் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கிறது. இதனால், கடைகளை வாடகைக்கு எடுத்து, தொழில் தொடங்க எவரும் முன்வருவதில்லை. எனவே, அப்பகுதியைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினரைக் கண்டறிந்து, அவர்களிடம் இந்த வணிக வளாகக் கட்டடத்தை ஒப்படைக்கலாம் என்றாலும், இந்த இடத்தில் வணிகம் சாத்தியமில்லை என்று விலகிக்கொள்கின்றனர்.
இதுதொடர்பாக, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் நா.அருள்ஜோதி அரசன் கூறியது:
சமத்துவபுரங்களில் வணிக வளாகம் கட்டும் திட்டம் ஏதும் ஊரக வளர்ச்சித் திட்டத்தில் கிடையாது. வேறெந்த சமத்துவபுரத்திலும் வணிக வளாகம் கட்டப்படவில்லை. செம்பராயநல்லூர் ஊராட்சியின் சொந்த நிதியில் அந்த வணிக வளாகக் கடைகள் கட்டப்பட்டிருக்கலாம். அது பயன்பாடில்லாமல் இருந்தால், அதை முறையாகப் பயன்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட ஊராட்சிக்கு அறிவுறுத்தப்படும் என்றார்.