இது எப்படி இருக்கு!!?
வேலூர், மே 14: மெட்ரிக். பள்ளிகளில் பயில வைப்பதன் மூலமே தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் நம்புவதிலும் ஆச்சரியம் இல்லை. காரணம், வேலூர் மாவட்டத்தில்
வேலூர், மே 14: மெட்ரிக். பள்ளிகளில் பயில வைப்பதன் மூலமே தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் நம்புவதிலும் ஆச்சரியம் இல்லை.
காரணம், வேலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் மூவர், மாவட்ட அளவில் 2, 3-வது இடங்களையும், ஆங்கில பாடத்தில் மாநில அளவில் முதலிடத்தையும் பிடித்துள்ளனர்.
தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளைப் பல்வேறு வழிகளில் மேம்படுத்த தமிழக அரசு முயற்சித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சமச்சீர் கல்வித் திட்டத்தை அறிமுகம் செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்போது, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக்., சுயநிதி பள்ளிகள் அனைத்திலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
அதுதவிர, பள்ளி ஆசிரியர்கள் மூலம் பிரசார இயக்கங்கள் நடத்தி, குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொள்கிறது அரசு. ஆனாலும், தனியார் மெட்ரிக். பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகம் நடைபெறுகிறது. காரணம், தரமான கல்வி அங்கு கிடைக்கிறது எனப் பெரும்பாலானோர் நம்புகின்றனர்.
இதன் வெளிப்பாடுதான், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கூட தங்களது பிள்ளைகளைத் தாங்கள் பணியாற்றும் அரசுப் பள்ளிகளில் சேர்க்காமல், தனியார் மெட்ரிக். பள்ளிகளில் சேர்க்கின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களையும் மெட்ரிக். பள்ளியின் ஒரே வகுப்பறைத் தோழிகள் மூவர் கைப்பற்றியிருக்கின்றனர். அதில் முதலிடம் பிடித்த மாணவியின் தந்தை தோல் தொழிற்சாலை உரிமையாளர்.
2-வது, 3-வது இடம் பிடித்த மாணவியரின் தந்தையர் இருவருமே அரசுப்பள்ளியின் ஆசிரியர்கள். அதேபோல, மாநில அளவில் ஆங்கில பாடத்தில் முதலிடம் பிடித்த மாணவரின் தந்தை, தாய் இருவருமே ஒரே அரசுப் பள்ளியில் ஆசிரியர்களாகப் பணியாற்றுகின்றனர்.
தங்களது பிள்ளைகள் சிறப்பிடம் பிடித்ததைக் கண்டு, இந்த பெற்றோர்களின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. தங்களது பிள்ளைகள் சிறப்பிடம் பிடிக்க அவர்கள் கூறும் காரணம், சிறந்த பயிற்சி, ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியவையே.
ஆனால், தங்களுக்குக்கீழ் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இவற்றைத் தரமுடிவதில்லை என்பதை உணர்ந்துதான், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது பிள்ளைகளை மெட்ரிக். பள்ளிகளில் சேர்க்கின்றனர் என்பதும் தெளிவாகிறது.
அரசுப் பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு நிகரான கல்வி கிடைப்பதில்லை என்ற அச்சமும் பலருக்கு இருக்கிறது. இதைப் பொய்யாக்கும் வகையில், அரசு ஊழியர்கள் தங்களது பிள்ளைகள் அனைவரையும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டுமே சேர்க்க வேண்டும் என்ற உத்தரவை அரசு அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக பரிசீலிக்கப்படாமல் இருக்கிறது.
சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்டாலும், அதைக் கற்பிக்கும் முறையில் அரசுப் பள்ளிகளில் இருந்து இந்த தனியார் மெட்ரிக். பள்ளிகள் முழுமையாக மாறுபடுகின்றன. எனவே, அரசுப் பள்ளிகளின் கற்பித்தல் முறை, ஆசிரியர்கள்-மாணவர்கள் இருதரப்பினரின் மீதான கட்டுப்பாடு போன்றவற்றில் மாற்றங்கள் கொண்டுவராமல் இருந்தால், சமச்சீர் கல்வி முறை அமலுக்கு வந்தாலும், தனியார் பள்ளிகள் மீதான ஈடுபாடு மக்களுக்குக் குறைய வாய்ப்பில்லை.
இதிலும் ஒரே ஒரு ஆறுதல், வாணியம்பாடி இஸ்லாமியா அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி சையீதா சாதியா இக்ரம், உருது பாடப் பிரிவில் 193 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3-ம் இடம் பெற்றுள்ளார். அவரது தாயார் அதே பள்ளியில் உருது ஆசிரியராகப் பணியாற்றுகிறார் என்பதுதான்!