முகப்பு
வேலூர்

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அருங்காட்சியகம் இல்லை!

வேலூர், மே 17: தமிழகத்தின் 32 மாவட்டங்களில் 21 மாவட்டங்களில் மட்டுமே அருங்காட்சியகங்கள் உள்ளன. மற்ற மாவட்டங்களில் இவை இன்னும் தொடங்கப்படவில்லை.  ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களிலும் ஒரு அருங்காட்சியகம் தொ

Updated On : 20 செப்டம்பர், 2012 at 7:51 PM
பகிர்:
Updated On : 27 டிசம்பர், 2023 at 9:26 PM

வேலூர், மே 17: தமிழகத்தின் 32 மாவட்டங்களில் 21 மாவட்டங்களில் மட்டுமே அருங்காட்சியகங்கள் உள்ளன. மற்ற மாவட்டங்களில் இவை இன்னும் தொடங்கப்படவில்லை.

 ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களிலும் ஒரு அருங்காட்சியகம் தொடங்கப்பட வேண்டும் என்ற அரசின் கொள்கை முடிவு முறையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தும் வலுத்து வருகிறது.

 தமிழகத்தில் முதல் முறையாக 1851-ம் ஆண்டு சென்னையில் அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது. அதன் பிறகு, புதுக்கோட்டையில் தொடங்கப்பட்டது. 1980-களில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த அப்போதைய முதல்வர் எம்ஜிஆர், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு அருங்காட்சியகம் அமைக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

Advertisement

 இதையொட்டி, சென்னை மற்றும் தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இந்த அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது. தமிழர்களின் கலை, பண்பாடு, நாகரீகம், தமிழகத்தை ஆண்ட பிற சமயத்தினர், படையெடுப்பு, சிற்பக் கலை எனப் பல்வேறு தகவல்களைக் கொண்ட பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய தகவல் களஞ்சியங்களாக இந்த அருங்காட்சியகங்கள் செயல்படுகின்றன.

 இதில், தமிழக அளவில் கிடைத்த பொருள்கள் மட்டுமின்றி, அந்தந்த மாவட்டங்களின் சிறப்பை விளக்கும் வகையிலான பொருள்களும் வைக்கப்பட்டிருக்கின்றன. இவையே, ஒவ்வொரு காலகட்டத்தில் இருந்த சமூக, இலக்கிய, சமயத்தின் அடையாளங்களை விளக்கும் கண்ணாடிகளாக இருக்கின்றன.

 ஆனால், 21 இடங்களில் உள்ள இந்த அருங்காட்சியகங்களில், சென்னை, புதுக்கோட்டை, திருநெல்வேலி, திருச்சி மாவட்டங்களில் மட்டுமே இவை சொந்தக் கட்டடத்தில் இயங்குகின்றன.

 கோவை, கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகை, பழனி, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, திருவாரூர், உதகை, வேலூர், விருதுநகர் ஆகிய இடங்களில் உள்ள அருங்காட்சியகங்கள் தனியாருக்குச் சொந்தமான கட்டடங்களிலும், பிற அரசு அலுவலகங்களிலும் வாடகைக்கு இயங்குகின்றன.

 இதுதவிர, தமிழகத்தின் பிற 11 மாவட்டங்களில் இன்றுவரை அருங்காட்சியகங்கள் தொடங்கப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. குறைந்தபட்சம் அந்தந்த மாவட்டங்களின் தகவல்கள் தொகுப்பையாவது கொண்ட அருங்காட்சியகங்கள் தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

எளிதில் அணுகும் இடமா? மொத்தம் உள்ள 21 அருங்காட்சியகங்களில் சில மட்டுமே, மக்கள் அதிகம் சென்றுவரும் சுற்றுலா தலத்தையொட்டிய இடத்தில் அமைந்திருக்கின்றன. குறிப்பாக, வேலூர் கோட்டைக்குள் அருங்காட்சியகம் இருப்பதால், கோட்டையைச் சுற்றிப்பார்க்க வரும் பொதுமக்கள், அருங்காட்சியகத்தைப் பார்வையிட எளிதாக இருக்கிறது. அதேபோல மற்ற அருங்காட்சியகங்களையும் மக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதிகளுக்கு மாற்றுவதன் மூலம், அதிகமானோர் கண்டுகளிக்க ஏதுவாக இருக்கும்.

மாணவர்களுக்கு..: ஆரம்ப காலங்களில் அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கல்விச் சுற்றுலாவாக, அருங்காட்சியகங்களுக்கு அழைத்து வரப்படுவது வழக்கம். அண்மைக் காலமாக இவ்வாறு அழைத்துவரப்படும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும், பள்ளித் தலைமையாசிரியர்களும் ஆர்வத்தோடு மாணவர்களை அழைத்து வர வேண்டும். அதேபோல, பள்ளித் தலைமையாசிரியர் கடிதத்தோடு வரும் மாணவர்களுக்கு நுழைவுக் கட்டணத்திலிருந்து விலக்கு அளித்தால் மாணவர்கள் அதிகமானோர் வந்து செல்லவும் ஏதுவாக இருக்கும் என்ற கருத்தும் வலுத்து வருகிறது.

பாதுகாப்பு..: சென்னையில் மட்டுமே அருங்காட்சியகப் பொருள்கள் திருடுபோவதைத் தடுக்க கண்காணிப்புப் காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதை மற்ற அனைத்து அருங்காட்சியகத்துக்கும் விரிவுபடுத்துவதன் மூலம், பொருள்கள் திருடுபோவதைத் தடுக்க முடியும். சொந்தக் கட்டடத்தில் இவை செயல்படுவதன் மூலம் தேவையான பாதுகாப்பு அறைகளை அமைக்க முடியும்.

 தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இந்த அருங்காட்சியகங்கள் தொடங்கப்பட்டாலே, அதன் நோக்கம் மக்களை முழுமையாகச் சென்றடையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.