முகப்பு
வேலூர்

திருவோத்தூர் ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயில் தல விருட்சம் காப்பாற்றப்படுமா?

செய்யாறு, செப்.22: திருஞானசம்பந்தர் பதிகம் பாடி ஆண்பனையை பெண்பனையாக மாற்றிய திருவோத்தூர் ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயில் தல விருட்சமான பனைமரங்கள்  காப்பாற்றப்பட வேண்டும் என பக்தர்கள் கோரி வருகின்றனர். தொண்டை

Updated On : 27 டிசம்பர், 2023 at 5:36 PM
பகிர்:

செய்யாறு, செப்.22: திருஞானசம்பந்தர் பதிகம் பாடி ஆண்பனையை பெண்பனையாக மாற்றிய திருவோத்தூர் ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயில் தல விருட்சமான பனைமரங்கள்  காப்பாற்றப்பட வேண்டும் என பக்தர்கள் கோரி வருகின்றனர்.

தொண்டை நாட்டில்  பாடல் பெற்ற திருத்தலங்களில் எட்டாவதாக ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயில் திகழ்கிறது. இக்கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

கோயிலில் கி.பி.17-ம் நூற்றாண்டில் சைவத்திற்கும், வைணவத்திற்கும் ஏற்பட்ட  சர்ச்சையை தீர்ப்பதற்காக திருஞானசம்பந்தர் இக்கோயிலுக்கு வந்தார். தல விருட்சமாக இக்கோயில் தோட்டத்தில் ஆண் பனை இருந்தது.

குரும்பை யாண்பனை யீன்குலை யோத்தூர், அரும்பு கொன்றை யடிகளைப் பெரும்பு கலியுண் ஞானசம்பந் தன்சொல்விரும்பு வார்வினை வீடே என்று 11 பதிகங்களை திருஞானசம்பந்தர் பாடினார்.

அவர் பதிகம் பாடி முடித்ததும் ஆண் பனை பெண்பனையாக மாறி, பழம் பழுத்து திருஞானம்பந்தர் காலில் விழுந்ததாக இக்கோயில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

  இங்குள்ள பெண் பனை மரங்களில் கனிகள் ஆடி மாதத்தில் காய்ப்பதுண்டு. அவற்றை உட்கொள்வோருக்கு குழந்தை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.

இம்மரத்தை திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சுற்றி வந்தால் திருமணம்  கைகூடும் சிறப்பும் உண்டு. இதனால் ஆண்டுதோறும் ஆடி மாதம் பனையடி விழா சிவனடி தொண்டர்களால்  சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இப்பனை மரங்கள் ஏற்கெனவே 5 இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது இரு பனைமரங்கள் மட்டுமே உள்ளன. அவற்றில் ஒன்று பனை ஓலைகள் விழுந்து மொட்ட

மரமாக கீழே விழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதனால் மீதமுள்ள ஒரு பனை மரத்தையாவது காப்பாற்ற தொடர்புடைய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரி வருகின்றனர்.

இம்மரங்களை செய்யாறு வேளாண்மை உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி, கீழ்நெல்லி வேதபுரி வேளாண்மை மையத்தைச் சேர்ந்த விவசாய வல்லுநர் முருகேசன் ஆகியோர் பார்வையிட்டு தங்கள் ஆலோசனைகளை தெரிவித்துள்ளனர்.

பனை மரத்தைச் சுற்றி நெருக்கமாக கட்டப்பட்டுள்ள மதில் சுவரை அகற்றி, சற்று தொலைவில் சுற்றுமதில் சுவரை எழுப்ப வேண்டும்.

புதிதாக முளைத்துள்ள பனை மரக்கன்றுகளை பிடுங்கி இடைவெளி விட்டு நட வேண்டும். மதிற்சுவரை சுற்றி தரையில் பதித்துள்ள கருங்கற்களை அப்புறப்படுத்தி மண் தரையாக்க வேண்டும். மரங்களுக்கு ஓரளவு தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும். இயற்கை உரங்களை இட்டு மரத்தை பேணி காக்க முடியும் என அவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இதை இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஏற்று தல விருட்சத்தை காப்பாற்ற வேண்டும் என பக்தர்கள் கோரி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.