பயனில்லாத பயணியர் மாளிகை!
செங்கம். டிச. 13: செங்கம் துக்காப்பேட்டையில் உள்ள பயணியர் மாளிகை பாழடைந்து காணப்படுகிறது. இதோடு, நெடுஞ்சாலைத் துறையின் குடோனாகவும், சமூக விரோதிகளின் புகலிடமாகவும், விஷப்பூச்சிகள் அடைக்கலமாகும் இடமாகவு
செங்கம். டிச. 13: செங்கம் துக்காப்பேட்டையில் உள்ள பயணியர் மாளிகை பாழடைந்து காணப்படுகிறது. இதோடு, நெடுஞ்சாலைத் துறையின் குடோனாகவும், சமூக விரோதிகளின் புகலிடமாகவும், விஷப்பூச்சிகள் அடைக்கலமாகும் இடமாகவும் மாறியுள்ளது.
இதனை சீரமைக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.
கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்தப் பயணியர் மாளிகை, நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
செங்கத்துக்கு வரும் அமைச்சர்கள், அரசுத் துறையினர், முக்கியப் பிரமுகர்கள் உள்ளிட்டோர் இம்மாளிகையைப் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், இந்தப் பயணியர் மாளிகையை சரிவர பராமரிக்கத் தவறிவிட்டதாகக் கூறப்படுகிறது. காலப்போக்கில் இங்கு இதனை யாரும் பயன்படுத்துவதும் இல்லை. இப்போது இங்கு பாம்பு, தேள் மற்றும் விஷப் பூச்சிகளும் குடியேறிவிட்டன.
குடோனாக மாறிய பயணியர் மாளிகை!
இதையடுத்து, பயணியர் மாளிகை வளாகத்தில் தார் டின்கள், ஜல்லிகள், மேம்பாலத்துக்குப் பயன்படுத்தப்படும் இரும்பு தூண்கள் உள்ளிட்ட பொருள்களை பாதுகாப்புடன் வைக்கும் இடமாகவே மாறிவிட்டது.
இதுமட்டுமின்றி, தார் காய்ச்சுதல், ஜல்லிகள் கலப்பது உள்ளிட்ட பணிகளும் இங்கு நடக்கின்றன. இதனால், இங்கிருந்து வெளியேறும் புகையால் அருகே வசிப்போரும், இவ்வழியாகச் செல்வோரும் பாதிக்கப்படுகின்றனர்.
தார் காய்ச்சுவதற்காக சாலையில் உள்ள புளியமரங்கள் வெட்டப்பட்டுள்ளதால், பசுமையாக இருந்த சாலை இப்போது பாலைவனம் போல் மாறிவிட்டது.
சமூக விரோதச் செயல்களும் நடப்பதுண்டு!
பயணியர் மாளிகையில் நாள்தோறும் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் நுழைந்துவிடுகின்றனர். அங்கு மது அருந்துதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர்.
பாழடைந்து போயுள்ள பயணியர் மாளிகையை சீரமைத்து, பயணிகள் தங்குவதற்கான வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றே பலரும் எதிர்பார்க்கின்றனர்.