ஒருங்கிணைந்த பதிவுத் துறை வளாகம் அமையுமா?
அரக்கோணம், டிச. 20: அரக்கோணத்தில் இரு இடங்களில் பதிவுத் துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றை ஒரே வளாகத்தில் அமையும் வகையில், ஒருங்கிணைந்த பதிவுத் துறை வளாகம் அமைக்க வேண்டும் என்று நகர மக்கள்
அரக்கோணம், டிச. 20: அரக்கோணத்தில் இரு இடங்களில் பதிவுத் துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றை ஒரே வளாகத்தில் அமையும் வகையில், ஒருங்கிணைந்த பதிவுத் துறை வளாகம் அமைக்க வேண்டும் என்று நகர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சார் பதிவாளர் எண் 2 அலுவலகம் காந்தி சாலையில் பதிவுத் துறைக்குச் சொந்தமான வளாகத்திலும், சார்பதிவாளர் எண் 1 அலுவலகம் சுவால்பேட்டையில் தனியார் கட்டடத்திலும் செயல்பட்டு வருகின்றன. தனியார் கட்டடத்திலேயே மாவட்ட பதிவாளர் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது.இப்போது பதிவுத் துறைக்கு சொந்தமான வளாகத்தில் செயல்பட்டுவரும் குற்றவியல் நீதிமன்றம் புதியதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டட வளாகத்துக்கு அடுத்த மாதம் மாற்றப்பட உள்ளது.
இதையடுத்து, சுவால்பேட்டையில் வாடகைக் கட்டடத்தில் இயங்கிவரும் சார் பதிவாளர் அலுவலகம், மாவட்ட பதிவாளர் அலுவலகம் ஆகிய இரண்டையும் பதிவுத் துறைக்கு சொந்தமான இடமான, நீதிமன்றம் காலி செய்யப்படும் கட்டடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த வளாகத்தின் கிழக்கு பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னரே பத்திர எழுத்தர்கள் அமர்ந்து, பத்திரம் எழுதுவதற்கான வளாகமும் உருவாக்கி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அமையுமானால் பத்திரப் பதிவு செய்ய வருவோர், அத்துறையின் ஊழியர்கள், பத்திர எழுத்தர்கள் உள்ளிட்ட பல தரப்பினருக்கு சிரமம் குறைய வாய்ப்பு உள்ளது என்ற கருத்தும் நிலவுகிறது.
இடம் பெயர உள்ள நீதிமன்றக் கட்டட வளாகத்தில், சார் பதிவாளர் அலுவலகத்தை இடம்பெற வைக்கும்போது, பலருக்கும் பயனுள்ளதாகவே இருக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.